காதலர் தினத்தில் ‘தனிமை வாழ்க’ - நாகாலாந்து அமைச்சரின் புதுமையான வாழ்த்து!

காதலர் தினத்தில் ‘தனிமை வாழ்க’ - நாகாலாந்து அமைச்சரின் புதுமையான வாழ்த்து!

நாகாலாந்து மாநில அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங்க் சமூக வளைதளங்களில் பதிவிடுவதில் பிரபலமானவர். காதலர் தினத்தன்று தனிமையில் இருப்பவர்களுக்கு சிறப்புச் செய்தி ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். “இந்த நாளில் மகிழ்ச்சியாக இருங்கள். சுதந்திரம் உள்ளதற்காக பெருமைப்படுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாகாலாந்தில் உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சராக இருப்பவர் டெம்ஜென் இம்னா அலோங், மாநிலத்தில் பா.ஜ.க. தலைவரும் அவர்தான். கடந்த தேர்தலின் போதுதான் முதன் முறையாக எம்.எல்.ஏ.வாகி அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

அந்த மாநிலத்தில் வருகிற 27 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இவ்வளவு பரபரப்புக்கு இடையில் டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவேற்றி நெட்டிஸன்களுக்கு கலகலப்பு ஏற்படுத்தி வருகிறார்.

வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த இவர், அந்த மாநிலத்திற்கு உரிய மக்களின் உடலமைப்பை கொண்டவர். அவரது கண்கள் சிறியதாகவும், உடல் குண்டாகவும் இருக்கும். தன்னை கேலி செய்பவர்களைக்கூட வித்தியாசமான முறையில் பதிலளித்து நெட்டிசன்கள் ரசிக்கவைக்கும் திறமைபெற்றவர்.

காதலர் தினத்தையொட்டி தனிமையில் இருப்பவர்களுக்கு என ஒருபிரத்யேக செய்தியை அவர் டுவிட் செய்துள்ளார். “இந்த நாளில் தனிமையாக இருப்பதற்கு பெருமைப்படுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். சுதந்திரமாக இருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும்” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

42 வயதான டெம்ஜென் இம்னா அலோங், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அண்மையில் ஒரு பதிவில், நீங்கள் தனிமையாகவும் அழகாகவும் இருந்தால் மற்றவர்களால் விரும்பப்படுவீர்கள். அவர்கள் உங்களை புகைப்படம்கூட எடுக்கலாம்.இப்படித்தான் நான் பிரபலமானேன்” என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

அதேபோல சென்ற ஆண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த என்னைப் போல தனிமையாக (சிங்கிளாக) இருங்கள் என்று பதிவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அலோங் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் காதலர்தின பதிவை 38,000-த்துக்கும் மேலானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, நெட்டிஸன்கள் பலரும் விதம் விதமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

“தனிமையில் இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். சுதந்திரம் மிகப்பெரிய பரிசு” என்று கூறியதெல்லாம் சரிதான். அதை கொஞ்சம் சிரித்துக்கொண்டே கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே. இன்னும் பலரும் அதை பார்த்திருப்பார்களே என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். (அவர் உம்மென்று இருக்கும் காட்சி வெளியானதுதான் இதற்கு காரணம்.)

மற்றொருவர், தங்கள் விருப்பப்படி புதிய கடினமான பாதையை தேர்ந்தெடுப்பவர்களிடமும் கருணை காட்டுங்கள். இந்த துன்பமான காலத்தில் விருந்தினர்களும் இருப்பார்கள் என்பதால் மணமகன் எங்கேயும் ஓடிப்போக மாட்டார். ஏனெனில் நரக வேதனையை அனுபவித்தவர்கள்தான் அங்கு இருப்பார்கள் என்று கிண்டல் செய்து விமர்சித்துள்ளார்.

அகில இந்திய தனிமைப்பட்ட இளைஞர்கள் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டி என்றால் எனது வோட்டு டெம்ஜென் இன்மா அலோங்கிற்குத்தான் என்று ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“உங்கள் முகபாவனையைப் பார்த்தால் நீங்கள் வேறு எதோ சொல்ல வந்தீர்கள்போல் தெரிகிறது” என மற்றொருவர் டுவிட் செய்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com