திருப்பத்தூரில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயம்! பட்டப் பகலில் நடந்த பயங்கரம்!

Leopard attack in Tirupattur
Leopard attack in Tirupattur
Published on

- தா.சரவணா

திருப்பத்தூர் மாவட்ட தலைநகரான திருப்பத்தூர் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் (ஜூன் 14ஆம் தேதி) வழக்கமான பரபரப்புடன் காணப்பட்டது. திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஒரு தனியார் கார் நிறுத்தும் இடத்தின் அருகே சிறுத்தை ஒன்று பதங்கிப் பதுங்கி வந்தது. அதை பார்த்த அங்கிருந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இதன் அருகிலேயே தனியார் மேல்நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் அவரவர் வகுப்பறைகளுக்குள் உள்ளே வைக்கப்பட்டு கதவு பூட்டப்பட்டது. இதனால் மாணவர்கள் பத்திரப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இத்தனை பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கும்போது சிறுத்தை கார் நிறுத்தும் இடத்தில் உள்ளே இருந்து வெளியே செல்ல வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தது. அப்போது உள்ளே சுவற்றுக்கு வெள்ளை அடித்துக்கொண்டிருந்த கோபால் என்பவரைத் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தாக்கிய சிறுத்தை அந்த இடத்தை விட்டு அகன்றது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்தனர். சிறுத்தை பதுங்கி இருக்கும் இடம் தெரியாத நிலையில், கார் நிறுத்தும் இடத்திற்கு உள்ளேயே கார் ஒன்றில் ஏறி தேடத் தொடங்கினர். ஒரு வழியாக சிறுத்தை இருக்கும் இடம் கண்டறியப்பட்டது.

இதற்குள் இரவாகி விடவே மீட்பு பணியில் ஈடுபட இருந்த வனத்துறையினர், மீட்பு பணியின் போது சிறுத்தையின் கண்களில் சிக்கி விடாமல் இருப்பதற்காக கருப்பு ஆடைகளை அணிந்தபடி ஏணி மூலமாக அந்த மைதானத்திற்குள் இறங்கினர்.

இதையும் படியுங்கள்:
நட்டநடு ரோட்டில் பட்டப் பகலில் நடந்த ஆணவ கொலை!
Leopard attack in Tirupattur

இதன் பின்னர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என வனத்துறையினர் முடிவு செய்தனர். இதை அடுத்து வேலூர் மற்றும் ஓசூரில் இருந்து இது போன்ற வனவிலங்குகளை மயக்கி ஊசி செலுத்தி பிடிப்பதில் வல்லுனர்களை திருப்பத்தூர் வர வைத்தனர். சிறுத்தை ஊருக்குள் புகுந்த பிரச்னை தொடர்ந்துகொண்டே செல்ல, இரவு இரண்டு மணி ஆகிவிட்ட நிலையில், மயக்க ஊசி செலுத்தும் வல்லுநர் குழு இரவு இரண்டரை மணிக்கு சிறுத்தைக்கு மயக்க ஊசியை துப்பாக்கி மூலமாக செலுத்தினர்.

ஊசி சிறுத்தை உடலில் பாய்ந்ததும் பயங்கர ஆக்ரோசமாக சத்தமிட்டது. இதனால் அந்த இடத்தில் நள்ளிரவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயக்க மருந்து வேலை செய்ய, செய்ய சிறுத்தை மயங்கி சாய்ந்தது. அதன் பின்னர் மயங்கிய சிறுத்தை ஒரு பாதுகாப்பான கூண்டுக்குள் வைக்கப்பட்டு ஓசூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினர் மூன்று நாட்கள் தங்கள் கண்காணிப்பில் சிறுத்தையை வைத்திருந்து விட்டு அதன் பின்னர் வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிறுத்தை எந்தக் காரணத்திற்காக ஊருக்குள் வந்தது என தெரியவில்லை. அது இங்கு இரண்டு மூன்று நாட்களாக சுற்றித் திரிந்து கொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இருந்தபோதும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை” என்றார்.

இப்படியாக திருப்பத்தூரில் ஏற்பட்ட 12 மணி நேர பரபரப்புக்கு மாவட்ட வனத்துறையினர் நல்லவிதமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com