மணிப்பூர் மாநிலம் சூரசந்திரபூரில் சமீபத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் கிளையில் ரூ.2.25 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு வங்கியில் திருட்டு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள வங்கியில் கம்ப்யூட்டர், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட ரூ. கோடி மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கிரிமினல்கள் குறிவைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இம்பால் பள்ளத்தாக்கு பகுதியின் வடக்கே காங்போக்பியில் மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. மணிப்பூரில் கடந்த மே மாதம் வன்முறை நடந்ததை அடுத்து வங்கிக் களை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கி அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வங்கியை திறந்து பார்த்தபோது அங்கு திருட்டு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
பணம் வைத்திருக்கும் பெட்டகம் திறந்திருந்தது. எனினும் கடந்த மே மாதத்தின் பிற்பகுதியில் பணப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் மற்றும் ஏடிஎம். இயந்திரத்தில் உள்ள பணம் அகற்றப்பட்டு தலைமை அலுவலகத்துக்கு
கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் 6 கம்ப்யூட்டர்கள், ஒரு பிரின்டர் மற்றும் சில மின்னணு சாதன கருவிகள் திருடு போயுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரி காங்போக்பி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி சூரசந்திரபூரில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் ரூ.2.2 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகல் காணாமல் போயிருந்தன.
கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த வங்கிக் கிளை கடந்த 10 ஆம் தேதி திறக்கப்பட்ட போதுதான் அதில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
திருடர்கள் வங்கியின் பின்புறம் துளை போட்டு உள்ளே நுழைந்து ரூ.1.25 கோடி ரொக்கம் மற்றும் 1 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து மணிப்பூர் இனமோதல்களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் 53 சதவீதம் மக்கள்தொகை கொண்ட மெய்டிஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குக்கி வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வன்முறை, கலவரத்துக்கு இதுவரை 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 500 -க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தாக்குதல் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 40,000-த்துக்கும் மேலானவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை திரும்பிவிட்டதாக கூறப்பட்டாலும் அங்கு அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன.