பல் பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு!

பல் பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு!
Published on

பில் பிடுங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாசமுத்திரம் பகுதிக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் உயரதிகாரியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் புகார் அளிக்க தயங்கிய பலர், பின்னாளில் துணிச்சலாக முன்வந்து புகார்களை அளித்திருக்கிறார்கள். சம்பவம் குறித்த செய்திகள் வெளியானதும் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங். பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது வழக்கு, சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரின் விசாரணையின் கீழ் இருந்து வருகிறது. சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தமிழக அரசு நடவடிக்கையை ஆரம்பித்தது. இதன் காரணமாக தி.மு.க அரசு பல விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.

பல் பிடுங்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும் சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று சட்டமன்றத்திலேயே முதல்வர் அறிவித்தார். ஆனாலும், அவர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லையென்றும் அவர் மீது புகார் தருவதற்கு பலர் தயங்கியதும் காரணமாக சொல்லப்பட்டது. ஒருவழியாக பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்த காரணத்தால் இதுவரை 4 வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பல்வீர் சிங் மீதும் அவருக்கு உதவியாக இருந்த கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள் மீதும் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக புதிதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜமீன் சிங்கப்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் தந்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் உலகராணி முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் பல்வீர் சிங் மீதும் ராஜகுமாரி, ராமலிங்கம், ஜோசப் உள்ளிட்ட காவல் நிலைய உதவியாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

*இதற்கிடையே சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஊழியர்கள் ஏற்கனவே காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது, காவல்துறை வட்டாரம். ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதத்தால் கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தால் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அவருக்கு உதவி செய்த காவல்துறை ஊழியர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் விவகாரத்தில் விசாரணைக் கைதிகளான தந்தையும், மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஊரே கொந்தளித்தது. கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் பல்வீர் சிங்கிடம் சிக்கி ஏராளமானவர்கள் தங்களுடைய பற்களை இழந்திருக்கிறார்கள். ஆனாலும் விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றமில்லை. தற்போது நான்காவது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் சி.பி.சி.ஐ.டி விசாரணை சுறுசுறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com