
ONGC நிறுவனம் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் திறன் கொண்ட இளம் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களின் கனவைத் தொடரவும், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் இளைய தலைமுறையினரை ஊக்கமளிக்கவும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ONGC நிறுவனம் 2025-26ம் ஆண்டிற்கான 21 விளையாட்டுகளில் திறமையான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை உதவித்தொகையாக 250 விளையாட்டு உதவித்தொகைகளை வழங்க ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த உதவித்தொகை 15 முதல் 20 வயதுடைய, ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ள பின்தங்கிய நிலையில் இருக்கும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
விருப்பமுள்ள விளையாட்டு வீரர்கள் ONGC-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://sportsscholarship.ongc.co.in-ல் செப்டம்பர் 22-ம்தேதி முதல் அக்டோபர் 21-ம்தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள திட்ட விவரங்கள் மற்றும் விதிமுறைகளை கவனமாக படிக்கவும். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்கள் தவறான சான்றிதழை அளித்தால், அதை நிராகரிக்கவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ONGCக்கு அதிகாரம் உண்டு.
சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் :
* பிறப்புச் சான்றிதழ்
* பாஸ்போர்ட் அல்லது ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழ் (ஏதேனும் ஒன்று)
தகுதிகள் :
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* 15 முதல் 20 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்
* வேறு எந்த நிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் :
* உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு TA/DA மற்றும் மற்ற போட்டிகளில் பங்கேற்பதற்கான தேவையான செலவுத்தொகை வழங்கப்படும்.
* உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு, போட்டிகளில் பங்கேற்கும் போது ONGC லோகோவுடன் கூடிய விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்படும்.
* உதவித்தொகை பெற்றவர்கள் தங்களுக்காக மட்டுமே 5,00,000 ரூபாய்க்கு தனிநபர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும்.