தமிழக சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் உட்பட 12 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இணையதள சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அந்த அவசர சட்டத்திற்கு அக்டோபர் மாதம் 1-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். அதையடுத்து இதற்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு இச்சட்டத்தின்கீழ் 3 மாத சிறைதண்டனை, அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் செய்வோர்க்கு ஒரு வருட சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோருக்கு 3 வருட கால சிறை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதைத் தவிர தமிழ் பல்கலை துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்ட மசோதா, தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் குறித்த மசோதா உட்பட மொத்தம் 12 மசோதாக்கள் இந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.