சமீபகாலமாக தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழகத்தில் மட்டும் 30-க்கும் அதிகமானோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பலரின் தற்கொலைக்குக் காரணமான இந்த ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டுக்கான புதிய விதிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும்.
அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைக்கப்படும். இதற்கு ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்த ஆணையம், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும். உள்ளூர் ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்களுக்கு பதிவு சான்றிதழை வழங்கும். விளையாட்டின் தன்மைப்படி அதை வரிசைப்படுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களை ஆணையம் கண்காணிக்கும். அவர்களைப் பற்றிய தரவுகளை பராமரிக்கும்.
அவசரச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற, தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ஐ பயன்படுத்தவும் அரசை ஆணையம் கேட்டுக்கொள்ளும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை தீர்த்து வைக்கும்.
விளையாட்டின் நேரம், அதில் செலுத்தப்படும் பணத்தின் அளவு, வயது கட்டுப்பாடு, போன்றவற்றை ஆணையம் ஒழுங்குபடுத்தும். ஆன்லைன் விளையாட்டை வழங்குபவர்களுக்கு எந்தவொரு உத்தரவையும் ஆணையம் வழங்க முடியும்.
சிவில் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம் போல (சம்மன் அனுப்புவது, சாட்சி பதிவு செய்வது, ஆவணங்களை கேட்டு வாங்குவது) ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.