சேலம் சைபர் கிரைமில் குவியும் ஆன்லைன் மோசடி புகார்கள்!

சேலம் சைபர் கிரைமில் குவியும் ஆன்லைன் மோசடி புகார்கள்!
Published on

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த பிரபு எனும் இளைஞர். இவரது செல்போன் வாட்ஸ் ஆப்புக்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை வாய்ப்பு தருவதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பி அவர் அதில் குறிப்பிட்ட லிங்கை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் சில நிபந்தனைகளுடன் வங்கியில் பணம் செலுத்தினால் உடனடியாக வேலை தரப்படும் என்று கூறப்பட்டிருந்ததைப் பார்த்து அதில் சொல்லியிருந்த படி இரண்டு தவணைகளாக வங்கியில் இரண்டு லட்ச ரூபாயை செலுத்தி உள்ளார் பிரபு. இருந்தும் வேலைக்கான எந்த அறிவிப்பும் வராமல் போனதால் தகவல் வந்த செல்போன்  எண்ணைத் தொடர்பு கொண்டபோது அந்த எண் அணைத்து வைக்கப் பட்டுள்ளது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரபு உடனே சேலம் மாநகர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சென்ற மாதம்  நடந்தது. இதே போல் சேலத்தில் ஒரு பெண் உள்பட இரண்டு பேரிடம் சுமார் 11 லட்சம் ரூபாய் மோசடியும் நடைபெற்று, அவர்களும் சேலம் சைபர்கிரைமில் புகார் அளித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து சேலத்தில் நடந்த வண்ணம் உள்ளது

வ்வளவுதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் நம் தேவையை நிறைவேற்றித் தருவதாகக் கூறும்போது ஏமாந்து விடுவது வழக்கமாகி வருகிறது. அதிலும் ஆன்லைனில் இது போன்ற ஏமாற்றங்களும் குற்றங்களும் பெருகி வருவதை அன்றாடம் அறிகிறோம். அறிவியல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளதோ, அதே அளவில் பாதகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மர்ம நபர்கள் ஆன்ட்ராய்டு செல்போனை அதிகளவில் பயன்படுத்தி நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

செல்போனில் உள்ள ஆப்ஷன்களைப் பயன்படுத்தி போட்டோக்களில் உள்ள பெண்களின் முகத்தை மட்டும் தனியாக எடுத்து மார்பிங்  மூலம் ஆபாச படமாக தயாரித்து மிரட்டி பணம் பறிக்கிறார்கள். முக்கியமாக வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறியும் வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தும் இளைஞர்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்யும் வழக்குகளின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதால் பொது மக்களிடமிருந்து புகார்கள் குவிந்து வருகிறது.

இளம் பெண்கள் இளைஞர்களிடம் ஆன்லைனில் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபடும் வட மாநில கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மோசடிகளில் பணத்தை இழந்த சைபர் கிரைம் போலீசார் மீட்டு வருகின்றனர் இந்த மோசடியில் ஈடுபடும் நபர்களையும் கைது செய்து வருகின்றனர். தற்போது ஆன்லைனில் வேலை வாய்ப்பு உள்ளதாக ஆன்லைனிலும்  வாட்ஸ் அப்பிலும் இளம் பெண்களையும் இளைஞர்களையும் குறி வைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பான புகார்களே அதிகரித்து வருகிறது.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் “சமூக வலைத்தளங்களில் காணப்படும் போலி விளம்பரங்களை நம்பியோ குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பேசும் நபர்களிடம் தங்களுடைய கிரெடிட் கார்டு வங்கி கணக்கு விபரங்கள் ஓடிபிகளை சொல்ல வேண்டாம். குறைந்த நாட்களில் இரட்டை லாபம் போன்ற கவர்ச்சிகரமான அறிவுப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண்ணான 1930ஐ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் இழந்த பணத்தை மீட்டு தர இயலும் என்கின்றனர். 

வேலை முக்கியம்தான். அதை விட முக்கியம் இருக்கும் பணத்தையும் வேலை வாய்ப்புக்காக என்று இழந்து ஏமாறாமல் இருப்பது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com