4 ஆண்டுகள் கழித்து வந்த ஆன்லைன் ஆர்டர்: மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த கஸ்டமர், அப்படி என்னவா இருக்கும்?

4 ஆண்டுகள் கழித்து வந்த ஆன்லைன் ஆர்டர்: மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த கஸ்டமர், அப்படி என்னவா இருக்கும்?

ப்போதெல்லாம் பொருட்களை மக்கள் இணையத்தில் வாங்குவது அதிகரித்து விட்டது. ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருள் குறிப்பிட்ட தேதியை விட ஒரு நாள் தாமதமானால் கூட, அதை கேன்சல் செய்யும் நபர்களே அதிகம். ஆனால் டெல்லியில் ஒருவர் 4 ஆண்டுகள் காத்திருந்து ஒரு பார்சலைப் பெற்றுள்ளார். 

நகரங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் நேரடியாக ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்க விருப்பம் காட்டுவதில்லை. ஏனென்றால் "அதான் இணையத்தில் ஆர்டர் போட்டா வீட்டுக்கே கொண்டு வந்து தரேனே. அப்புறம் எதுக்கு கடைக்குப் போகணும்" என்ற மெத்தனம் தான். இதனால் பிலிப்கார்ட், அமேசான் போன்ற இணையத்தில் பொருட்களை விற்கும் தளங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிவிட்டது. அதேபோல, மக்களின் மனநிலையும் இவர்களுக்கு ஏற்றார் போல மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். 

இணைய வர்த்தகத்தின் தொடக்க காலங்களில், ஒரு பொருளை ஆர்டர் போட்டால் அந்தப் பொருள் வரும் வரை பொறுமையாகக் காத்திருந்து வாங்கி வந்த மக்கள், இப்போது ஒரு நாள் காலதாமதம் ஏற்பட்டால் கூட, அந்த ஆர்டரைக் கேன்சல் செய்துவிட்டு, புதியதாக வேறு பொருளை ஆடர் போடவே விரும்புகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்ட ஆர்டருக்கு நான்கு ஆண்டுகள் காத்திருந்து அதைப் பெற்றுள்ளார். குறிப்பாக இந்த நான்கு ஆண்டுகளும் அதை கேன்சல் செய்ய வேண்டும் எனக் கூட அவர் சிந்திக்கவில்லை. 

சீனாவிலிருந்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு டெலிவரி செய்யும் ஆன்லைன் வர்த்தக சேவையில், ஜாக்மாவின் அலி எக்ஸ்பிரஸ் முதலிடத்தில் இருக்கிறது. இந்த தளத்தில் டெல்லியைச் சேர்ந்த நிதின் அகர்வால் என்பவர் 2019ல் ஒரு ஆர்டரைப் போட்டு பணத்தையும் முழுமையாக செலுத்தியுள்ளார். அவர் ஆர்டர் செய்த நேரத்தில் கொரோனா காரணமாக சீனாவிலிருந்து சர்வதேசப் போக்குவரத்து தடைப்பட்டது.

அடுத்த சில மாதங்களிலேயே இந்தியாவிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 2020ல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மெதுவாக தளர்ந்து வரும் வேளையில், மத்திய அரசு சீனாவின் டிக் டாக் உள்ளிட்ட பல செயலிகளைப் பயன்படுத்த தடை விதித்தது. இதில் அந்த நபர் ஆர்டர் செய்த அலி எக்ஸ்பிரஸ் செயலியும் இடம்பெற்றிருந்தால், இந்தியாவிற்கான அனைத்து சேவைகளும் தடைபட்டது. இதனால் அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான ஆர்டர்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் பலர் தங்களது ஆர்டர்களை கேன்சல் செய்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் தான், கடந்த ஜூன் 21ஆம் தேதி, நித்தின் அகர்வாலுக்கு வேறொரு டெலிவரி நிறுவனத்தின் மூலம் ஒரு பார்சல் வந்துள்ளது. அதைப் பிரித்து பார்த்தபோது 2019ல் அலி எக்ஸ்பிரஸில் அவர் ஆர்டர் செய்த பொருள், நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த நித்தின் அகர்வால், அந்தப் பார்சல் போட்டோவை பதிவிட்டு ட்விட்டரில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இந்த பார்சல் எப்படி தடைபட்டது, தாமதத்திற்கான காரண விவரங்கள் உள்ளிட்ட எதுவும் டெலிவரி செய்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல நித்தின் அகர்வால் அலி எக்ஸ்பிரஸில் என்ன ஆர்டர் செய்தார் என்றத் தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அவர் பதிவிட்ட செய்தியின் கமெண்ட் பகுதியில், அனைவரும் அது என்ன பொருள்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com