தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு ஒரு வழியாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சிறப்புத் தீர்மானத்தால் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. முதல்வரும் தன்னுடைய பேச்சில் சிறப்புத் தீர்மானத்தால் விளைந்த நல்விளைவாக குறிப்பிட்டிருந்தார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அப்போது ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து ஏராளமான சர்ச்சைகள், விவாதங்கள்.
நீண்ட மௌனத்திற்குப் பின்னர் மசோதா குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து சில கேள்விகள் எழுப்பப்பட்டு, அதற்கு தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில் மசோதா திருப்பி அனுப்பப்பட்டதால் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரிடம் தமிழக அரசு அனுப்பியிருந்தது. கடந்த 15 நாட்களாக ஆளுநர் எடுக்கப்போகும் முடிவுக்காக தமிழகமே காத்திருந்தது.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா, மறுபடியும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு திரும்பவும் அனுப்பி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கும் தீர்மானம் சென்ற ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோதும் ஆளுநர் அதை நிராகரித்தார்.
பின்னர் நீட் தேர்வு விலக்கை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் மசோதாவை ஏற்றுக்கொண்டார். அதே போன்று ஆன்லைன் ரம்மி மசோதா விஷயத்தில் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆளுநர் அனுமதிக்காக அனுப்பபப்பட்டிருந்தது.
நேற்று மாலையில் வெளியிடப்பட்ட சட்டமன்ற செய்திக்குறிப்பில் சட்டமன்றத்ல் நிறைவேற்றிய தீர்மானத்தின் நல்விளைவாக, ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக முதல்வர் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதைத் தடைசெய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாட்களுக்கு முன்னரே அனுமதி அளித்துவிட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களிலிருந்து செய்தி வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே தெலுங்கானா ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த சந்திரசேகர் ராவ் அரசு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களில் உரிய நேரத்தில் ஓப்புதல் பெறப்படவில்லை என்று குறை கூறி,
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் மூன்று மசோதாக்களுக்கு அனுமதி அளித்தார்.
திடீரென்று ஆளுநர் மசோதாவுக்கு ஓப்புதல் அளித்தமைக்கு என்ன காரணம்? கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை. கொடி அசைந்ததும் காற்று வந்ததா அல்லது காற்று வந்ததும் கொடி அசைந்ததா என்று முடிவுக்கு வரமுடியாத நிலையில்தான் இருக்க வேண்டியிருக்கிறது.
மூன்று நாட்களுக்கு முன்னரே அனுமதியளிக்கப்பட்டிருந்தால் ஏன் உடனே அறிவிக்கப்படவில்லை? சிறப்புத் தீர்மானம் இயற்றப்பட்டதால் ஆளுநர் பணிந்து போனாரா அல்லது தெலுங்கானா வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரவிருந்த நேரத்தில் சர்ச்சைகளை தவிர்க்க மசோதா அனுமதியளிக்கப்பட்டதா? ஏகப்பட்ட கேள்விகள். யாரால் பதில் சொல்ல முடியும்?