ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். இதன் பின் அந்த சட்டம் காலாவதியானது என்று பல்வேறு தரப்பினரால் சொல்லப்பட்டு வந்தது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கடந்த 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளுநர் ஆர்.என்.ரவியை, ராஜ்பவனில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது என்ன விஷயங்கள் பற்றிப் பேசப்பட்டன என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை. மேலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் நடைபெற்ற சந்திப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் பல வுயிர்கள் பலியானதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.