எதிர்க்கட்சி கூட்டணியால் ஒருசில கட்சிக்குத்தான் ஆதாயம்: குலாம் நபி ஆசாத்!

எதிர்க்கட்சி கூட்டணியால் ஒருசில கட்சிக்குத்தான் ஆதாயம்: குலாம் நபி ஆசாத்!
Published on

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதால் எந்த பலனும் ஏற்படாது என்று ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டியுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஆசாத் கூறினார்.

இரு தரப்பினருக்கும் ஏதாவது ஆதாயம் இருந்தால்தான் எதிர்க்கட்சி கூட்டணி என்பதற்கு அர்த்தம் இருக்கும். தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் 50-க்கு 50 என்ற நடைமுறையை கடைப்பிடிக்கலாம் அல்லது இவை 60-க்கு 40 என்ற விகிதத்திலும் இருக்கலாம். ஆனால், இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் இருதரப்பினரிடையே ஒருவர் மற்றொருவருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றார் அவர்.

உதாரணமாக மேற்குவங்க மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அங்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருவர்கூட இல்லை. அப்படியிருக்கையில் அவர்கள் எப்படி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் எதன் அடிப்படையில் தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு தொகுதியை விட்டுக் கொடுப்பதால் மம்தா கட்சிக்கு என்ன ஆதாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதேபோல ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.எல்..கூட கிடையாது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியால் என்ன தரமுடியும் என்று அவர் கேட்டார்.

இதேபோல ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது. அதேநேரத்தில் அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஒ.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வேறு மாநிலங்களில் செல்வாக்கு ஏதும் இல்லை. அப்படியிருக்கையில் காங்கிரஸ் அவருக்கு எந்த தொகுதியை விட்டுக் கொடுக்கும் பதிலுக்கு ஜெகன்மோகன் ரெட்டி எதை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுப்பார் என்றார் ஆசாத்.

வரும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள ஒரு வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி தேவைதான். ஆனால், துரதிருஷ்டவசமாக பிராந்திய கட்சிகளான எதிர்க்கட்சிகள் தங்கள் மாநிலத்தை தவிர வேறு மாநிலத்தில் எதுவும் செய்துவிட முடியாது.

எதிர்க்கட்சி கூட்டணி என்பது ஒரு சில அரசியல்கட்சிக்குத்தான் பலனளிக்கும். அதாவது மாநிலங்களில் ஆட்சியமைத்துள்ள கட்சிகளுக்குத்தான் இது பலனளிக்கும் என்றார் அவர்.

தேர்தலுக்கு முன்னதாக அரசியல்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கும், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைப்பதற்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. என்னை பொருத்தவரை தேர்தலுக்குப் பின்தான் புதிய கூட்டணி உருவாகும் என்றார் ஆசாத்.

சமீபத்தில் கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மத்தியில்தான் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட்டதே தவிர மாநிலங்களில் அவை இன்னும் செல்வாக்குடன்தான் உள்ளன. வலிமையான தலைமை உள்ள இடங்களில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

முன்புள்ள அரசியலுக்கும் இப்போதுள்ள அரசியலுக்கு என்ன வித்தியாசம் என்றால், முன்பு மத்திய தலைமைதான் மாநிலங்களை யார் ஆளவேண்டும் என தீர்மானிக்கும். ஆனால், இன்றைய அரசியலில் மாநிலத்

தலைமைதான், மத்திய தலைமையில் யார் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யும் நிலையில் இருக்கிறது என்றார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com