"55 வருடக் கடனை அடைத்த பிறகு தான் மனசு லேசானது" ஒரு தேசிய சாம்பியனின் நிம்மதிப் பெருமூச்சு!

"55 வருடக் கடனை அடைத்த பிறகு தான் மனசு லேசானது" ஒரு தேசிய சாம்பியனின் நிம்மதிப் பெருமூச்சு!
Published on

முன்னாள் தேசிய வட்டு எறிதல் சாம்பியனான தயாபுன் நிஷா, தனது பால்ய வயதுத் தோழி ஜூலேகாவை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் மீண்டும் சந்தித்தார். தயாபுனைப் பொருத்தவரை இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது. வட்டு எறிதலில் தேசிய சாம்பியனாக இருந்தும் கூட ஒரு எடையற்ற லேசான மோதிரம் ஒன்று இத்தனை நாட்களாக அவரது மனதில் எடையேற்றி கனக்க வைத்து நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருந்தது. ஒருவழியாக தோழியைச் சந்தித்ததும் அதிலிருந்து அவருக்கு விமோசனம் கிடைத்து விட்டது.

அப்படி அவர் சுமக்க முடியாமல் சுமந்த அந்த மோதிரத்தின் கதை தான் என்ன?

அந்த மோதிரம் தொலைந்தது 1967 ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் சிவசாகரில் உள்ள தாய் அலி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில். அப்போது இருவருமே அந்தப் பள்ளியின் மாணவிகள் மற்றும் தோழிகளும் கூட. கால ஓட்டத்தில் இருவருமே பிரிந்து விடுகிறார்கள். வாழ்க்கை எங்கெங்கோ இட்டுச் சென்று விட அப்போது நிகழ்ந்த ஒரு விஷயம் மட்டுமே இருவருக்கும் பொதுவானதொரு அம்சமாக அவ்வப்போது தயாபுன் நிஷாவின் மனதை நெருடிக் கொண்டே இருந்தது.

55 ஆண்டுகளுக்குப் பிறகு, தயாபூன் தனது மன நெருடலுக்குக் காரணமான அந்தப்பொருளுக்கு உண்டான தொகையை, ஆம், அந்தச் சிறு மோதிரத்துக்கான தொகையைத் தான்... அதை தன் தோழியான ஜூலேகாவைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த பிறகு நெருடலில் இருந்து விடுபட்டு மனம் லேசாகிச் சிரிக்கிறார்.

தயாபுன் தனது இந்த முயற்சியால் அந்தச் சிறிய மோதிரத்தை காட்டிலும் விலை மதிக்க முடியாத அருமையான பொன்னான ஆண்டுகளின் நினைவுகளை மீட்டெடுத்திருக்கிறார். தன் தோழியைச் சந்திக்க முயற்சி எடுத்து அந்த மோதிரத்துக்கு உண்டான தற்போதைய மதிப்பு 12,000 ரூபாய் அடங்கிய ஒரு கவரை அவரிடம் அளித்த பிறகே தயாபுனால் மனதில் இருந்த எடையை இறக்கி வைக்க முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்தத் தோழிக்கு இவரை முதலில் நினைவில்லை. இருவருக்கும் வயதாகிறது என்பதைத் தாண்டி வேறு வேறு விதமாக வாழ்க்கை அவர்களை திசை திருப்பிச் சென்றதில் முதலில் ஒருவருக்கொருவர் அடையாளம் காணவே பெரும் பிரயத்தனம் தேவைப்பட்டிருக்கிறது.

"நாங்கள் அப்போது 7 அல்லது 8 ஆம் வகுப்பு மாணவர்களாக இருக்கலாம். ஜூலேகா ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் தங்க நகைகளை

அணிந்து கொண்டு பள்ளிக்கு வருவார். ஒரு நாள், அவர் வகுப்பறையில் இருந்த போது தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை தொலைத்து விட்டார்” - என்று பழைய சம்பவங்களை நினைவு கூர்கிறார் பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் அஸ்ஸாமிய பெண் தடகள வீராங்கனையான தயாபூன்நிஷா.

“நான் பள்ளி ஸ்போர்ட்ஸ் டீமில் இருந்ததால் விளையாடுவதற்காக பள்ளிக்குச் சீக்கிரமாகச் செல்வேன். அந்த நாட்களில், மாணவர்களான நாங்களே தான் எங்கள் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. எனவே, மறுநாள் காலை வகுப்பறையைச் சுத்தம் செய்யும் போது, ஜூலேகாவின் தொலைந்து போன மோதிரத்தைக் கண்டேன். இருப்பினும், நான் அதைக் கொண்டு போய் வகுப்பறையில் ஆசிரியரிடம் கொடுக்கும் போது ஒருவேளை அதைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்படலாம் என்ற பயத்தில் அதைத் திருப்பித் தராமல் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டேன். காலப்போக்கில், என் தந்தை இறந்துவிட்டார், நாங்கள் நிறைய பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டோம். ஒருவேளை, அப்போது அந்த மோதிரத்தை எனது குடும்பத்தினர் விற்றிருக்கலாம்,” என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்து போகிறார் தயாபுன்.

காலப்போக்கில், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகளை இழந்தோம்.எனக்கு ரயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது, ஆனால் மோதிரத்தை ஜுலேகாவிடம் ஒப்படைக்காததற்காக என் மனம் என்னைத் தூங்கவே விடவில்லை. நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன்.

"மோதிரம் விற்கப்பட்டு விட்டதால் இப்போது அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பித் தர முடியாது என்பதால், நான் அவளைச் சந்திக்கும் போது அதன் மதிப்பைக் கொடுப்பேன் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஜூலேகாவிடம் மோதிரத்தை ஒப்படைக்காததற்கு அந்த வழியில் பரிகாரம் செய்யலாம் என்று நினைத்தேன், ”என்கிறார் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தயாபுன் நிஷா.

“அவள் இருக்கும் இடம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால், என் சகோதரியின் உதவியை நாடினேன். நிறைய பேரிடம் பேசிய பிறகு, ஜூலேகா எங்கு வசிக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். அவளுடைய எண்ணைப் பெற்றவுடன், நான் அவளைப் பார்க்க வருகிறேன் என்று அவளை ஃபோனில் அழைத்துச் சொன்னேன். செவ்வாய் அன்று நான் அவளைச் சந்தித்தபோது, அவளிடம் எல்லாவற்றையும் சொன்னேன். மோதிரத்திற்கு நான் கொடுத்த மதிப்பை அவள் முதலில் ஏற்க மறுத்துவிட்டாள்,” என்று தயாபுன் கூறினார்.

ஜூலேகாவைக் கண்டுபிடித்து கடனை அடைக்கத் தவறியிருந்தால் தனக்கு நிம்மதி கிடைத்திருக்காது என்றும் அவர் கூறினார்.

அதிராமல் மிக மென்மையாகப் பேசும் ஜூலேகா பல தசாப்தங்களுக்குப் பிறகு சிறு வயதுத் தோழி தயாபூனைச் சந்தித்ததில் அதே அளவு மகிழ்ச்சி அடைந்தார். “அவள் வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவளை மறந்துவிட்டேன், ஆனால் அவள் என்னை எப்போதும் நினைவில் வைத்திருந்திருக்கிறாள், ”என்று ஜூலேகா கூறும் போது தொலைந்து போன மோதிரத்துக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும் போலிருந்தது.

அது மட்டும் அன்று தொலைந்திருக்கா விட்டால் இன்று இந்த இரு அன்பு நெஞ்சங்களும் மீண்டும் இணைந்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com