#JUST IN : தமிழக அரசியலில் பரபரப்பு..! முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு..!

OPS- STALIN
OPS- STALINSource:twitter
Published on

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பணிகள் சூடு பிடித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் , கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளையும் கூட்டணியில் இணைந்து விட்டன. நீண்ட காலமாக அரசியல் களத்தை குழப்பிக் கொண்டிருந்த தேமுதிக கட்சியும் நேற்று திமுகவில் இணைந்து தனது இருப்பை உறுதி செய்து கொண்டது. தற்போது கூட்டணியில் இணையாமல் இருப்பது ஓபிஎஸ் மற்றும் ராமதாஸ் அணியினர் தான். 

அதிமுக கூட்டணியிலும் திமுக கூட்டணிகளும் ராமதாஸ் அணியை ஏற்பதற்கு அங்கேயே முட்டுக்கட்டைகள் உள்ளன.

இந்நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் நிலை இந்த தேர்தலில் என்னவாகும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ்ஸை சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு காட்டி வருவதால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்படிப்பட்ட அரசியல் சூழலில் பன்னீர்செல்வம் அனைத்து பக்கங்களிலும் நிராகரிக்கப்பட்டவராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் அவர் பாஜகவில் இணைந்து கவர்னர் பதவியையும் அவரது மகனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் பெறுவார் என்று கூறப்பட்டு வந்தது. தகவல் இவ்வாறாக வெளிவந்த போதிலும், இதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஒரு விளக்கங்களும் யார் தரப்பிலிருந்து வரவில்லை. நீண்ட காலமாக பாஜக மேலிடத்தை தொடர்பு கொள்ள ஓ.பன்னீர்செல்வம் முயன்று வருவதாகவும், தமிழகத்தை சேர்ந்த ஒரு சில பாஜக தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் கூறப்பட்ட வந்தது. 

பரபரப்பான அரசியல் களத்தில் பன்னீர்செல்வம் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து வந்ததால் , அவரது முக்கிய ஆதரவாளர்கள் பலரும் திமுக கட்சியில் சென்று ஐக்கியமாகிவிட்டனர். ஒரு சிலர் அதிமுகவிலும், தமிழக வெற்றி கழகத்திலும் இணைந்து விட்டனர். ஓபிஎஸ் தனக்கு காலம் கனியும் என்றும் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். 

இந்த சூழலில் இன்று மதியம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசியது, தமிழக அரசியலில் பரபரப்பான அரசியல் செய்தியாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் ஓபிஎஸ் அவர்கள் நடைபயிற்சியின் பொழுது முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசி இருந்தார். அவரைப் பொறுத்தவரை தான் முதல்வராக இருந்த போது கூட , அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினிடம் இணக்கமான நட்பையே கடைப்பிடித்து இருந்தார். 

பின்னர் திமுக ஆட்சியைப் பிடித்து ஸ்டாலின் முதல்வரான போதும் , ஓபிஎஸ் அவரை கடுமையாக விமர்சிக்காமல் இருந்து வந்தார். தற்போதைய அரசியல் சூழலில் தனக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டதாக ஓபிஎஸ் உணர்ந்துள்ளார். அதனால் தனது அரசியல் எதிர்காலத்தை தக்க வைக்க என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இன்று முதல்வரை அவர் சந்தித்தது கட்சியில் சேரவா? அல்லது கூட்டணிவில் சேரவா? அல்லது இது பாஜகவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட சாதாரண சந்திப்பா ? என்பதற்கு விரைவில் விடை தெரியும். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் , ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com