இன்றைய தினம் - எதிர் தினம்!

 இன்றைய தினம் - எதிர் தினம்!
Published on

உங்களில் பலருடைய தினசரி அலுவல்களும் அதிக மாற்றம் இல்லாமல் ஆற்றொழுக்குப் போல ஒரே விதமாக அமைந்திருக்கும். உணவுப் பழக்கங்கள், நண்பர்களின் தேர்வு, பேசும் விஷயம், படிக்கும் செய்திகள், பழகும் விதங்கள் இவற்றில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. இப்படி ஒரே விதமான பழக்க வழக்கங்களோடு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது ஒரு சில விஷயங்களில் நல்லதுதான். ஆனாலும் நமது பழக்க வழக்கங்களை அதிரடியாக மாற்றிப்பாருங்கள். வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். அடியோடு தொடர்ந்து மாற்றிக்கொள்ள முடியாவிட்டாலும் இன்று ஒரு நாளாவது மாற்றித்தான் பாருங்களேன்?

தினசரி ஒரே விஷயத்தைச் செய்து அலுத்துப் போகிறவர்களின் மூளையில் உதயமானதுதான் எதிர் தினத்தைக் கொண்டாடும் ஐடியா! வழக்கத்துக்கு மாறாகச் செயல்களைச் செய்வதுதான் இன்றைய தினத்தின் சிறப்பு. தினசரி வாக்கிங் போகிறீர்களா? இன்று போகாதீர்கள். காலையில் பூரி சாப்பிடவே மாட்டீர்களா? இன்று சாப்பிடுங்கள். காப்பி குடிப்பவர்கள் டீக்கும், டீ குடிப்பவர்கள் காப்பிக்கும் மாறுங்கள்.

படிக்கும் தினசரிகளையும், பார்க்கும் டீவி சேனல்களையும், பயன்படுத்தும் வாகனங்களையும், சாப்பிடும் உணவு வகைகளையும் எல்லாவற்றையும் இன்று ஒரு நாள் மாற்றித்தான் பாருங்களேன்? வீடு அல்லது அலுவலகத்துக்குப் போகும் ரூட்டை மாற்றுங்கள். வழக்கமாகப் பொருட்கள் வாங்கும் கடையில் வாங்காமல் வேறு கடையில் வாங்குங்கள். உபயோகிக்கும் அத்தனை பொருட்களின் பிராண்டையும் மாற்றுங்கள். இப்படியெல்லாம் செய்தால் மூளை புத்துணர்வு அடைகிறதாம். பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் வளருகிறதாம்.

அதற்காக மாறுதல் வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டி விடாதீர்கள்! ஜாக்கிரதை!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com