வாரிசு அரசியலுக்காகவே எதிர்க்கட்சிகள் கூட்டணி: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா
Published on

வாரிசு அரசியலுக்காகவே எதிர்க்க்ட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார். காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது அடக்குமுறை, சார்பு அரசியல் மற்றும் வஞ்சக அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜெய்ப்பூரில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் “ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசை வெளியேற்றுவோம்” எனும் கோஷத்தோட தேர்தல் பிரசாரத்தை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கிவைத்து பேசியதாவது,“எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது தேசபக்தியுடன்கூடிய ஜனநாயக கூட்டணி அல்ல, அது வாரிசுகளை பாதுகாக்கும் அரசியல் கூட்டணியாகும்.

காங்கிரஸ் கட்சியில் தாய், மகன், மகள் சேர்ந்து குடும்ப அரசியல் நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காங்கிரஸ் அங்கு பதவியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது அடக்குமுறையுடன் கூடிய வஞ்சக அரசியல் கூட்டணியாகும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது.

எதிர்க்கட்சிகள் தங்களை தேசபக்தியுடன் கூடிய ஜனநாயக கூட்டணி (பிடிஏ) என்று கூறிவருகின்றனர். ஆனால், வாரிசுகள் பாதுகாப்பு கூட்டணி என்று நாங்கள் அழைக்கிறோம். இவர்களின் நோக்கம் எல்லாம் தங்கள் குடும்ப அரசியலை வளர்ப்பதுதான். ஆனால் மோடி நாட்டை முன்னோக்கி நடத்திச் செல்கிறார். இந்த வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இவர்கள் தங்களை தேசபக்தியுடன்கூடிய ஜனநாயக கூட்டணி என்று சொல்லிக் கொள்கின்றனர். ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சமாஜவாதி கட்சிகள் வாரிசு அரசியலை அடிப்படையாக்க் கொண்டவை. இவர்கள் யாருக்கும் எதையும் விட்டுத்தர மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி, தாய், மகன், மகள் கொண்ட குடும்ப அரசியல் கட்சி. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலோட் உள்ளிட்ட அக்கட்சியில் இருக்கும் தலைவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள். முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் அக்கட்சியின் உள் ஒப்பந்த்தாரராக இருக்கிறார். ராஜஸ்தானில் கெலோட் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மகளிர்க்கு பாதுக்காப்பு இல்லை. குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன. அசோக் கெலோட் வாக்குவங்கி அரசியல் நடத்தி வருகிறார் என்று நட்டா குற்றஞ்சாட்டினார்.

ராஜஸ்தானில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அங்கு காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு பா.ஜ.க. ஆட்சி மலர வேண்டும் என்று குறிப்பிட்ட நட்டா, நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கினார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் சி.பி.ஜோஷி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் சதீஷ் பூனியா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பேசினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com