ஜூலை 17 இல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: 24 கட்சிகள் பங்கேற்பு!

ஜூலை 17 இல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: 24 கட்சிகள் பங்கேற்பு!
Editor 1

ர்நாடக மாநிலம், பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் முயற்சி மேற்கொண்டார். முதல்கட்டமாக 16 அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்தன. தற்போது மேலும் 8 அரசியல் கட்சிகள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முதல் கூட்டம் பிகார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில்இந்த கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (எம்.டி.எம்.கே.), கொங்கு தேசிய மக்கள் கட்சி (கேடிஎம்கே), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிகே), புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்.எஸ்.பி.), அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்.), கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய புதிய அரசியல்கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். கொங்கு தேசிய மக்கள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும் முன்பு, அதாவது 2014 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவருமான மல்லிகார்ஜுன கார்கே, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பெங்களூருவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், நிதிஷ்குமார் அழைப்பின் பேரில் பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்று வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி முடித்தீர்கள். அப்போது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அடுத்த தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு பா.ஜ.க.வை வீழ்த்த சபதம் ஏற்றோம். இதை நாம் மறந்துவிடக்கூடாது.

மீண்டும் ஜூலை மாதம் கூடுவதாக நாம் ஒப்புக் கொண்டிருந்தோம். நாம் தொடர்ந்து விவாதித்து எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை கட்டமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. நாட்டில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 17 ஆம் தேதி நாம் அனைவரும் பெங்களூருவில் சந்தித்து பேசுவோம். அதைத் தொடர்ந்து இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடி விவாதிப்போம். உங்கள் அனைவரின் வருகையையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கார்கே அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பிகார் மாநிலம் பாட்னாவில், ஜூன் 23 ஆம் தேதி, நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்குவங்க மாநில முதல்வர் ம்ம்தா பானர்ஜி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான எம்.கே.ஸ்டாலின், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com