
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் அரசியல் தலைவர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
அந்நிறுவனம் அனுப்பிய அலெர்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், "State Sponsored, அதாவது அரசு ஆதரவில் செயல்படும் ஹேக்கர்கள் உங்கள் ஐபோனை தாக்க வாய்ப்புள்ளது. அரசு ஆதரவில் செயல்படும் ஹேக்கர்கள் உங்கள் ஆப்பிள் ஐடியுடன் இயங்கும் ஐபோனை குறி வைக்கிறார்கள் என ஆப்பிள் நம்புகிறது. இந்த சைபர் தாக்குதல் காரர்கள் நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் உங்களை தனிப்பட்ட முறையில் குறிவைத்து கவனிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் உங்களுடைய ஐபோன் பாதுகாப்பு அம்சத்தை தாக்கினால் உங்களின் தகவல்கள், கேமரா, மைக்ரோபோன், உரையாடல்கள் உள்ளிட்டவற்றை அணுகி உங்களை கண்காணிக்க முடியும். ஒருவேளை எங்கள் தரப்பிலிருந்து வரும் தவறான அலாரமாகக்கூட இது இருக்கலாம். இருப்பினும் எச்சரிக்கையுடன் இருங்கள்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை மெசேஜ் தேசிய அளவில் முக்கிய தலைவர்களாக இருக்ககூடிய சசிதரூர், மஹிவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டவர்களுக்கும், மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களுக்கும் வந்துள்ளது.
இதை அவர்கள் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த சைபர் தாக்குதல் முயற்சிக்கு பாஜகதான் காரணம் என விமர்சித்துள்ள இவர்கள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இதுபோன்ற எச்சரிக்கை மெசேஜ்களை ஆப்பிள் நிறுவனம் உலகின் பல நாட்டு தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தலைப்பிலிருந்து முதல்முறை அனுப்பப்படுவதால் தற்போது இது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
இதே போல கடந்த 2021 ஆம் ஆண்டில் 'பெகாசஸ்' என்ற ஸ்பைவேரைப் பயன்படுத்தி இந்தியா உள்பட பல உலகத் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், பிரபலங்களின் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப்பை ஊடுருவிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது வந்திருக்கும் இந்த சைபர் தாக்குதல் எச்சரிக்கை, ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.