

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை ஒன்றிணைந்து எதிர்கொள்வது குறித்த உத்திகளை வகுப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஜூன் மாதம் 12 ஆம் தேதி பாட்னாவில் கூடி விவாதிக்க உள்ளன.
இந்த தகவலை பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதாதளம் நிர்வாகிகள் கூட்டத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவது குறித்தும், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை ஒன்றாக எதிர்கொள்வதற்கான தேர்தல் உத்திகள் குறித்தும் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி பாட்னாவில் கூடி விவாதிக்க முடிவு செய்துள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவை புறக்கணித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முதான் புதிய நாடாளுமன்றத்தை திறந்துவைத்திருக்க வேண்டும். ஆனால், அவரை புறக்கணித்து விட்டு பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற வளாகத்தை திறந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க.வுடனான உறவை துண்டித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் சிறிய கட்சிகளுடன் சேர்ந்து மகா கூட்டணி அமைத்து பிகாரில் ஆட்சியமைத்த நிதிஷ்குமார், இப்போது பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எதிரான அணியில் தற்போது 18 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சில கட்சிகள் தங்கள் அணியில் சேரக்கூடும் என்றும் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் கூட்டம் தேர்தலுக்கான ஆயத்த கூட்டமாக இருக்கும் என்றும் பிரதான கூட்டம் பின்னர் நடைபெறும் என்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
1970-களில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான புரட்சிகர இயக்கத்தை சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பாட்னாவில்தான் தொடங்கினார். அதேபோல பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய முன்னணியின் கூட்டத்தை பாட்னாவில்தான் தொடங்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தவர் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜிதான்.
மேலும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தை போல எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை பிகாரில் தொடங்கலாம். அடுத்த கூட்டத்தை எங்கு வைத்துக்கொள்வது என்பது பற்றி பின்னர் முடிவு செய்யலாம். நாம் ஓரணியாக உள்ளோம் என்பதை முதலில் வெளிப்படுத்துவோம் என்கிறார் மம்தா பானர்ஜி.
கடந்த வாரம் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியிடமும் புதிதாக பேச்சு நடத்தியுள்ளார் நிதிஷ்குமார். முன்னதாக ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனை உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரையும் நிதிஷ்குமார் சந்தித்து வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவாக ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்த வேண்டும் என்கிற நிதிஷ்குமாரின் யோசனையை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார். அப்படிச் செய்தால் குறைந்தபட்சம் 475 தொகுதிகளில் பா.ஜ.க.வை நேரடியாக எதிர்கொள்ள முடியும் என்பது நிதிஷ்குமாரின் கருத்தாகும்.
எனினும், “பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் கனவு காண்பதாகவும். அவரது முயற்சி ஒருபோதும் பலிக்காது. எதிர்க்கட்சிகளிடம் தன்னை ஒருமித்த பிரதமர் வேட்பாளராக காட்டிக் கொள்ள நிதிஷ் முயன்று வருகிறார். ஆனால், அவரை பிரதமர் வேட்பாளராக யாரும் ஏற்கமாட்டார்கள்” என்று பிகார் மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை செல்வாக்கை இழந்துவிட்டன. மேலும் சில அரசியல்கட்சிகள் குடும்ப அரசியலாக உள்ளது. அவர்களால் ஒன்று சேர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.