மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியபோது, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இது பற்றி பேசும்போது, ‘வாக்கெடுப்பை சந்திக்க முடியாமல் எதிர்க்கட்சியினர் ஓடிவிட்டனர்’ என்று பிரதமர் மோடி கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க பாஜகவின் ஷேத்ரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் அமைப்பினருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் (வீடியோ கான்பரன்சிங்) உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், ‘இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றிகரமாகத் தோற்கடித்தோம். அவர்களின் எதிர்மறையான எண்ணங்களையும் தோற்கடித்தோம். வாக்கெடுப்பை விரும்பாத எதிர்க்கட்சியினர், கூட்டணியில் உள்ள விரிசல் எங்கே வெளியாகிவிடுமோ என்று பயந்து நாடாளுமன்றத்தை விட்டு ஓடிவிட்டனர்’ என்றார்.
‘நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்ததுடன், அவர்களின் தேசவிரோத போக்குக்கும் தக்க பதிலடி கொடுத்தோம். மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. மணிப்பூர் பிரச்னையை வைத்து அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் முயன்றன. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அவர்கள் விரும்பவில்லை. மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க நினைத்தார்கள். அது நடக்கவில்லை’ என்றார் பிரதமர் மோடி.
‘வறுமையை ஒழிப்போம்’ என்று காங்கிரஸார் ஆட்சியில் இருந்தபோது கூறிவந்தனர். ஆனால், வறுமையை அவர்கள் ஒழிக்கவும் இல்லை, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால், பாஜக அரசுதான் ஏழைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி, அவர்கள் வளம் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
‘மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியினரை பயமுறுத்தியும் மிரட்டியும் வருகிறது. இதை நாம் பஞ்சாயத்து தேர்தலின்போது கண்கூடாகப் பார்த்தோம். இருந்தபோதிலும் இந்தத் தேர்தலில் பாஜகவினர் ஓரளவு வெற்றி பெற்றனர். ஆனாலும், அவர்களை பேரணி நடத்த விடாமல் ஆளுங்கட்சியினர் மிரட்டியும் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். வாக்காளர்களையே மிரட்டும் அரசு ஒன்று உண்டு என்றால், அது மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுதான்’ என்றார் பிரதமர் மோடி.