பெங்களூருவில் ஜூலை 17,18ல் எதிர்க்கட்சிகளின் கூட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!

பெங்களூருவில் ஜூலை 17,18ல் 
எதிர்க்கட்சிகளின்  கூட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு!
Editor 1

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் அடுத்த கூட்டம் ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பா.ஜ.க.வின் மும்பை நடவடிக்கைகள் அக்கட்சியை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்னாவில் முதல் கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த கூட்டம் பெங்களூருவில் வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும். மதவாதம் மற்றும் ஜனநாயக விரோத சக்திகளை முறியடித்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி சமீபத்தில்தான் முன்வைத்தார். இந்த நிலையில் அடுத்த சில நாட்களிலேயே மும்பையில் பா.ஜ.க.வின் அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் மற்றும் 8 பேர் மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அஜித் பவார் துணை முதல்வராகவும் மற்றவர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

மும்பை விவகாரத்தால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாதிக்கப்படாது. பா.ஜ.க.வுக்கு எதிராக நாங்கள் இன்னும் வலுவாக போராடுவோம். பா.ஜ.க. திட்டமிட்டே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது. இனி நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவோம். மும்பை நடவடிக்கைகள் எங்கள் கரத்தை வலுப்படுத்தியுள்ளன என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில், பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் “நாங்கள் ஒன்றாக இருக்கிறோம், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்” என்பதை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க்கட்சிகள் கூட்டணியின் அடுத்த கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்று கூறியிருந்தார். ஆனால், அன்றைய தேதிகளில் சில மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் இருப்பதால் கூட்டம் 17 மற்றும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்லாவில் நடைபெற இருந்த கூட்டம் மோசமான வானிலை காரணமாக பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சி அணிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com