ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் புகழேந்தி? - பரபர தகவல்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் புகழேந்தி? - பரபர தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்தான் தற்போது எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவும், அரசியல் கட்சிகள் மத்தியில் விவாதப் பொருளாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் தேர்தல் இது. ஈரோடு கிழக்குத் தொகுதியை தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வசம் மீண்டும் ஒப்படைத்துவிட்டது திமுக தலைமை. இப்போது அதிமுக தரப்பில் தான் சிக்கல் நீடித்து வருகிறது. காரணம் அந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கட்சிக்காக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒதுக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு தோல்வி கண்டது. காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, தமாகா வேட்பாளர் யுவராஜாவை விட 8,904 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதற்கேற்ப அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

 இந்நிலையில் எடப்பாடி தரப்பினர் பேசுகையில், கூட்டணி கட்சிகளுடன் பேசி வேட்பாளர் குறித்து தகவல் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மறுபுறம் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கடலூரில் இன்று நடக்கும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

 இந்சூழலில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசுகையில்...

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் ஒப்படைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி தப்பித்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால் ஈரோட்டில் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.


மேலும் அவர் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் என்ன சொல்கிறார் என்பதற்காகதான் நாங்கள் காத்திருக்கிறோம். காரணம், இரட்டை இலைக்கு சொந்தக்காரர் அவர் மட்டுமே. கூட்டணி தொடர்பாக பாஜக உடன் ஓபிஎஸ் பேசி முடிவு எடுப்பார் எனக் கூறினார்.

மேலும் பேசுகையில், சொந்த தொகுதியில் நின்று தோல்வி கண்டவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவர் அரசியல் அனாதை ஆகி விட்டார். எனவே அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை.

தற்போது அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை விட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புத்திசாலி. ஏனெனில் கள நிலவரம் நன்கு தெரிந்தவர். திரை மறைவில் அதிமுகவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவேதான் ஓ.பன்னீர்செல்வம் உடன் நான் இருக்கிறேன். தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால் தற்போது அவருக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லை. ரோஷம் இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யட்டும் என்று புகழேந்தி சவால் விடுத்தார்.

அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி உடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றது ஓ.பன்னீர்செல்வத்தால் தான்.

அதிமுக சார்பாக ஓபிஎஸ் அணியில் உள்ள ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் , பி பார்மில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் கையெழுத்திட வேண்டும். கட்சி பிளவுபட்டிருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் குறித்த விஷயம் சிக்கலாக மாறும் எனத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com