எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே உண்டான கட்சி தலைமை குறித்தான போட்டியில் நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருந்ததால், அதிமுக தற்போது இபிஎஸ் வசமாகி இருக்கிறது. இதனால், அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவை பெரிதாக நம்பி இருந்தார். ஆனால் பாஜக, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்தது. அதோடு, தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பன்னீர்செல்வத்தை கழட்டி விடவும் முடிவு செய்து விட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியுடன்தான் கூட்டணி என் முடிவு செய்து விட்டது.
அதேநேரம், கட்சி மற்றும் சின்னம் விவகாரத்திலும் பாஜக ஓபிஎஸ்சுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதனால் பாஜக மீது கடும் அதிருப்தி இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் ஓபிஎஸ். மேலும், பாஜக மேலிடத்தை சந்தித்து கூட்டணி குறித்து முடிவெடுக்க பல முறை முயற்சி செய்தும் ஓபிஎஸ்சுக்கு அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை. அதுமட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்குக் கூட பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதே நிலையில்தான் டிடிவி தினகரனும் இருக்கிறார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் கூறினாலும், அதை அவர் ஏற்றுக் கொள்ளாததால், பாஜக இருவரையும் கைவிட்டு விட்டது.
ஆகையால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது இணைந்து உள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டுள்ளதால், அடுத்து என்ன செய்வது என்றும் ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘சீமானுடன் இணைந்து 3வது அணி அமைக்கலாம்’ என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர். பல மாவட்டங்களில் 10 சதவீதம் வரை ஓட்டுக்களை சீமான் வைத்திருக்கிறார். இதனால் சீமானுடன் கூட்டணி சேர்ந்தால், தென் மாவட்டங்களில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பிடிக்கலாம். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை 3வது இடத்துக்கு தள்ளலாம் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர். குறிப்பாக, தேனியில் ரவீந்திரநாத், சிவகங்கை அல்லது ராமநாதபுரம், விருதுநகரில் டிடிவி தினகரன் ஆகியோரை நிறுத்தினால் பெரிய அளவில் ஓட்டுக்களைப் பிரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இதனால் சீமானுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவது நல்லது என்றும் பன்னீர்செல்வத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனால் ஓபிஎஸ் 3வது அணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் சீமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தில் 3வது அணியை பன்னீர்செல்வம் உருவாக்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக தனது கருத்துக்களை பன்னீர்செல்வம் தெரிவிக்கத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இனி வேகமாக பாஜகவை எதிர்ப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.