

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலில் வரவிருக்கும் நிலையில் கூட்டணியை பலப்படுத்த முடியாமல் அதிமுக திணறி வருகிறது. ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இன்னும் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. இந்நிலையில் கூட்டணியைப் பலப்படுத்த நேரடியாக களத்தில் இறங்கியது பாஜக.
இதன்படி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல், நேற்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி விவகாரம் மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தரப்பில் 50 இடங்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜகவுக்கு 23 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் ஒரு ஸ்பாய்லர் என தெரிவித்த பியூஷ் கோயல், அவரால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகள் குறையக் கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் கூட்டணியை பலப்படுத்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க பாஜக முயற்சி செய்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நேற்று இரவு தொண்டர் உரிமை மீட்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய ஓபிஎஸ், இபிஎஸ் உடன் இணையும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல பாடம் புகட்டுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறுகையில், “கடந்த 11 தேர்தல்களில் அதிமுக தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அதிமுகவை அதளபாதாளத்தில் தள்ளியுள்ளார் இபிஎஸ். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இபிஎஸ்-க்கு நல்ல பாடம் புகட்டவோம். அவருடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தவெக-வை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே முயற்சி மேற்கொண்டார். ஆனால் இந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காத நிலையில், செங்கோட்டையன் தவெக தலைமையில் கூட்டணியை அமைக்க பலமாக திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
கூட்டணியை விரிவுபடுத்த முடியாமல் திணறி வரும் இபிஎஸ்-க்கு எதிராக, செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் செயல்படுவது அதிமுக-விற்கு பாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
திமுக மட்டுமின்றி தவெக-வையும் சமாளிக்க வேண்டியுள்ளதால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்பது தான், தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் விஜய் பாஜக கூட்டணியில் இணைவது தான் அவரது அரசியல் வருகைக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
பாமக-வில் உட்கட்சி பூசலால் பல்வேறு பிரச்சினைகள் நடந்து வரும் நிலையில், கூட்டணி குறித்த அறிவிப்பை இன்னும் அக்கட்சி தலைமை வெளியிடவில்லை. அதே நேரம் தேமுதிக வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய பிறகே, கூட்டணி குறித்த விவரங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும், பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணிக்கு அழைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.