கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. தமிழ்நாட்டின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்த்து மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் ஒரே ஒரு தொகுதியில் பாஜக கூட்டணியான அதிமுகவும் வெற்றி பெற்றன. அதிமுக வெற்றி பெற்ற அந்த ஒரே ஒரு தேனி தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே, ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ‘ஓ.பி.ரவீந்திநாத் குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும், ஓ.பி.ரவீந்திநாத் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வசதியாக, இந்தத் தீர்ப்பு உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற கட்சி தலைமைப் போட்டியில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே, ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த பரபரப்பு தீர்ப்பு குறித்து, ஓ.பி.ரவீந்திரநாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில், “நாட்டில் ஜனநாயகம் சாகவில்லை என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு. வாக்குப்பெட்டிகளை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்து ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். சட்ட விரோதமான காரியங்கள் தேர்தலின்போது நடைபெற்றன. காலதாமதமானாலும் நீதி கிடைத்துள்ளது. எதை செய்தும் வெற்றி பெற்றுவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், முடிவில் இப்படிதான் தீர்ப்புகள் வரும். அதை தாங்கிக்கொள்ளும் சக்தி அவர்களுக்கு வேண்டும். உண்மை தோற்பதில்லை என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.