

'அதிமுகவை மீட்பேன் எனும் தர்மயுத்தம் தோல்வியில் முடிந்ததால்' தற்போது திமுகவில் இணைந்துள்ளார் ஓபிஎஸ். அதிமுக சார்பில் மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒருவர் 76 வருட வரலாறு கொண்ட திமுகவில் இணைவது அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து இட்டு திமுகவில் இன்று காலை இணைந்தார்.
திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "இன்றைக்கு பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுகவில் தாய்கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்துக் கொண்டிருக்கின்றேன். என்னை இணைத்துக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய முதல் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய அரசியலில் அண்ணா காட்டிய வழி கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற ஒரு பண்பாட்டுடன் ஸ்டாலின் அவர்கள் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்றாகவே அறிந்து திமுகவில் பெரு மகிழ்ச்சியுடன் இணைந்து இருக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமியைச் சர்வாதிகாரி எனச் சாடினார். "இன்று அதிமுக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆணவப் போக்கால் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாகத் தென் மாவட்ட மக்களைப் புறக்கணிப்பதில் அவர் குறியாக இருக்கிறார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அண்ணா மற்றும் கலைஞர் காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாட்டுடன் ஆட்சியை வழிநடத்துகிறார்," எனப் புகழ்ந்து தள்ளினார்.
அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னால் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இன்றைக்கு தளபதி அவர்களின் தலைமையை ஏற்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் .நாடே தளபதி அவர்களை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கத்தில் அரவணைப்போடு எப்படி நடக்க வேண்டும் என தளபதி அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் ஆட்சியில் கடந்த ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக பொறுப்பேற்று அனைத்து நிலைகளிலும் ,அனைத்து துறைகளிலும் இன்று சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிற நோக்கத்தோடு தளபதி ஒரு நல்ல ஆட்சியை சிறந்த ஆட்சியை தமிழக மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறார். பல்வேறு சாதனைகளை வழி நடத்துகிறார் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
பெண்கள் இன்று மணமகிழ்ச்சியோடு எவ்வித சிரமமும் இன்றி தங்கள் குடும்பத்தை வழிநடத்தும் விதமாக உதவிகளை தந்து கொண்டு மனமகிழ்ச்சியுடன் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற வரலாற்றில் பேரறிஞர் அண்ணா எப்படி அனைத்து கட்சிகளையும் அரவணைப்போடு வழிநடத்தினாரோ அதேபோல் தளபதி அவர்களும் சட்டமன்றத்தில் தாயுள்ளத்துடன் அனைத்து கட்சியினருக்கும் சம பங்குடன் பேசும் உரிமை தந்து அவரவர் கருத்துக்களை தெரிவித்து அதற்கு தக்க பதிலை தெரிவித்து வருவது தமிழக மக்களை கவர்ந்து இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தல் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது அதே அனைத்து மக்களும் முதல்வராக மீண்டும் ஸ்டாலினை தளபதியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் உள்ளனர். திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு எந்த வகையான சூழல்கள் இருந்தாலும் அதை கட்டிக் காத்து அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் இன்று திராவிட சித்தாந்தத்தை காப்பாற்றி முன்னணி தலைவராக தளபதி இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவை இன்று பொறுப்பில் இருக்கக் கூடிய தற்காலிக தலைவராக சர்வாதிகாரமாக வைத்திருக்கிறார் இபிஎஸ் .அவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நாள் முதல் அதிமுகவை அழிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அனைத்து தொண்டர்களும் அறிந்து தான் இன்று தளபதியின் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் .அதிலும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எந்த காலத்தில் முன்னுக்கு வரக்கூடாது என்பதை இபிஎஸ் கவனமாக இருக்கிறார்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கலைஞர் "பச்சை தமிழன்" என்று பாராட்டினார் அதை இந்நேரத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன் ஆட்சியை வழிநடத்தி செல்வதற்கும் ,தமிழக மக்களை அரவணைத்து செல்வதற்கும் திமுக தலைசிறந்த இயக்கமாக இன்றைக்கு இயங்கி கொண்டிருக்கிறது என்பதை நினைவு கூறுகிறேன்.
மகிழ்ச்சியுடன் நான் திமுகவில் இணைத்து கொண்டிருக்கிறேன் என்னை பாசத்துடன் இணைத்து கொண்ட தளபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவில் நான் தொண்டனாகத்தான் இணைந்திருக்கிறேன், ஒரு தொண்டன் எவ்வாறு இந்த இயக்கத் வளர்வதற்கு உதவுவாரோ அதுபோல நானும் ஒரு தொண்டனாக இயங்குவேன்" என ஓ பன்னீர்செல்வம் பேசினார்.
எந்த அழுத்தத்தின் காரணமாகவும் நான் இதில் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் என்னுடைய சுய முடிவாக மன மகிழ்ச்சியுடன் எடுத்த முடிவு தான் என்றும் கூறிய ஓபிஎஸ், ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் என்றும் தேர்தலில் போட்டியிடுமாறு அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொண்டு போட்டியிடுவேன் என்றும் கூறினார்.