எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த தலைமை மோதலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தினார். அதைத் தொடர்ந்து இதைப்போலவே இன்னும் சில மாநாடுகளையும் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல தரப்பு ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மேற்கு மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் அதிமுக கொடிகளைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி நகர அதிமுக கட்சியினர் அந்த மண்டபத்துக்குள் இருந்தவர்களிடம் விவாதம் செய்ததோடு, நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் அகற்றினர். இதைத் தொடர்ந்து அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றபோது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட அதிமுகவினர் எடப்பாடி-சேலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து அங்கு வந்த போலீசார், அதிமுகவினரை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களை, எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அப்போது வெளியே வந்த புகழேந்தியின் காரை அவர்கள் வேகமாகத் தட்டினர். மேலும், தகாத வார்த்தைகளால் அவர்கள் திட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆயினும், இந்தக் கூட்டத்தை சமாளித்துக் கொண்டு புகழேந்தியின் கார் அங்கிருந்து வேகமாகச் சென்றதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இது சம்பந்தப்பட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்த நிலையில் சேலம் மாவட்டம், எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 30 பேர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார் கொடுத்து உள்ளனர். அந்தப் புகாரில், ‘ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.