எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

திமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்தது. ஆனாலும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன.

நீதிமன்றம் மூலம் இதுபோன்று சட்டப் போராட்டம் நடத்திவரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, மக்கள் மன்றத்திலும் தங்களது தரப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை மக்கள் முன்வைக்கவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் சிவகங்கையில் ஓபிஎஸ். ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இன்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்பு நடைபெற்று முடிந்த அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை அடைந்து வருவதால் அவர் பதவி விலக வேண்டும். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுகவை தனது சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமி அழிக்க நினைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவினால் அடையாளம் காணப்பட்டு, அதிமுகவின் முதல்வராகச் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கும் நோக்கத்தோடும். பதவிகளை பறித்து அவரை கட்சியிலிருந்து விலக்கும் எண்ணத்தோடும் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து விலக வேண்டும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர்.

எடப்பாடி பழனிச்சாமியை நிரந்தரமாகக் கட்சியை விட்டு விலக்கவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் சுப்புரத்தினம் மற்றும் பசும்பொன், சுப்பிரமணி, வைகை பாலன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com