தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகளை ஐந்து நாட்களுக்குள் கண்டுபிடிக்க உத்தரவு: டிஜிபி சைலேந்திரபாபு!

தமிழகத்தில் காணாமல் போன குழந்தைகளை ஐந்து நாட்களுக்குள் கண்டுபிடிக்க உத்தரவு: டிஜிபி சைலேந்திரபாபு!

சென்னை புறநகர் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராமில் அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 75 ஆயிரம் புகார் மனுக்கள் மகளிரிடமிருந்து பெறப்பட்டு இருக்கிறது. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, சில மனுக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மகளிருக்கு நியாயம் வழங்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு உள்ள பிரச்னைகளை அறிவியல் மற்றும் உளவியல் பூர்வமாக அணுக வசதியாக 120 அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு சமீபத்தில், பெங்களூரு மனநிலை மருத்துவ நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், 18 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகள் காணாமல் போய் இருக்கின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றங்கள் சில கருத்துகளைத் தெரிவித்து இருக்கின்றன. அதன் அடிப்படையில் 1,624 காவல் நிலைய அதிகாரிகள், 222 அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், உடனடியாக இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, காணாமல் போன குழந்தைகளை ஐந்து நாட்களுக்குள் கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. காணாமல் போயிருக்கும் குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்து இருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

இந்த நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையர் ஏ.அருண், இணை ஆணையர் விஜயகுமார், துணை ஆணையர்கள் பெருமாள், உமையாள், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், ஜெயலட்சுமி, உதவி ஆணையர் சதாசிவம், ஆய்வாளர் பிரித்திவிராஜ், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com