
நீலகிரி மாவட்டம், முதுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பொம்மன் – பெள்ளி தம்பதியினர். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான பொம்மன், 1984ம் ஆண்டு முதல் வனத்துறையின் வழிகாட்டுதலின்படி முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் யானைகள் பராமரிப்பில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பெள்ளியும் யானைகள் பராமரிப்பில் பொம்மனுக்கு உதவியாக தொடர்ந்து பயணித்து வருகிறார். யானைகளுடனான தங்களின் அனுபவங்களை இந்த பழங்குடி தம்பதியர் பகிர்ந்து கொள்ளும் வகையில், குறும்பட இயக்குநர் கார்த்திகியின், ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் எடுத்த குறும்படம் ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்தது.
ஆஸ்கர் விருது பெற்ற குறும்படமான, ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸில்’ (Elephant Whisperers) படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் அந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆகியோர் நேற்று சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியை சந்தித்தனர். அப்போது, ஆஸ்கர் விருது பெற்ற ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் மற்றும் பொம்மன்-பெள்ளி தம்பதியை கவுரவப்படுத்தும் விதமாக தனது ஜெர்சியை அவர்களுக்கு வழங்கி கௌரவப்படுத்தினார் தோனி.
இதனிடையே, இன்று சென்னையில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் இவர்களுக்குப் பாராட்டு விழா ஒன்றும் நடைபெற்றது. இதில், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் மற்றும் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்திய சிஎஸ்கே அணி நிர்வாகம், முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நிதி உதவியும் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.