மியான்மரில் இசைநிகழ்ச்சியின் போது, ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி அந்நாட்டு ராணுவம் நாட்டை கைப்பற்றியது.
பின்னர் ஆங் சான் சூகியை வீட்டுக்காவலில் வைத்தது. மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், மியான்மரில் உள்ள வடக்கு மாகாணமான கச்சினியில், நேற்று சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அந்நாட்டு ராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் இசைக்கலைஞர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்நாட்டு ராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப் பட்டது.
மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. பொது மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு ராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.