வெளிநாட்டுக் கள ஆய்வு: திடக்கழிவு மேலாண்மை குறித்து முதல்வரிடம் மேயர் பிரியா அளித்த பரிந்துரைகள்!

வெளிநாட்டுக் கள ஆய்வு: திடக்கழிவு மேலாண்மை குறித்து முதல்வரிடம் மேயர் பிரியா அளித்த பரிந்துரைகள்!
Published on

மீபத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்று வந்தார் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா. அவரோடு, மாநகராட்சி அதிகாரிகள் குழுவும் சென்றிருந்தது. இந்தப் பயணத்தில் அந்தந்த நாடுகளில் உள்ள குப்பைத் தொட்டிகள், சேகரிக்கப்படும் குப்பையை கையாளும் விதம், கடற்கரைப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவும் சுகாதாரம் போன்ற பலவற்றையும் ஆய்வு செய்தனர்.

வெளிநாட்டுப் பயணம் முடித்து சென்னை திரும்பிய மேயர் ஆர்.பிரியா, தனது பயணம் குறித்த அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். இது குறித்து மேயர் ஆர்.பிரியா கூறுகையில், "திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக ஒன்பது முக்கியமான பரிந்துரைகளை அளித்திருக்கிறோம். அவை:

* சென்னையின் அனைத்து பிரதான சாலைகள் மற்றும் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கு தனியாக ஒரு மூடிய குப்பை தொட்டிகள் அமைக்கலாம். இந்த வகை தொட்டிகளில் மூடியை திறக்காமல் குப்பையை கொட்டுவதற்கு வசதியாக தொட்டிகளின் மூடிகளில் இரண்டு துளைகள் கொண்ட குப்பை தொட்டிகளை அமைக்கலாம்.

* பேப்பர், கண்ணாடி, உலோகங்கள், உணவுக் கழிவுகள் மற்றும் கலப்புக் கழிவுகள் போன்றவற்றைப் பெறுவதற்கு பலவகை வண்ண குறியீடு கொண்ட நவீன பிளாஸ்டிக் காம்பேக்டர் தொட்டிகள் முதல் முறையாக சோதனை முறையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கலாம்.

* குப்பை கையாளும் பணி மற்றும் மக்கும், மக்காத குப்பையை பிரித்துக் கொட்டுவதற்கு விழிப்புணர்வு ஏற்புடுத்துதல், அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்றவற்றுக்கு பிரத்யேகமாக ஒரு அலுவலர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

* குறுகிய தெருக்களைக் கொண்ட பகுதிகளில் சிறிய வகை 3.5 கன மீட்டர் கொண்ட காம்பேக்டர் வாகனங்களைப் பயன்படுத்தலாம்.

* சென்னை மாநகராட்சியில் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் வாகனங்களில் 'ஆன் போர்டு வையிட்டிங் மிஷின்' கருவியைப் பொருத்தி, வெவ்வேறு பயனாளர்களால் உருவாக்கப்படும் திடக்கழிவின் எடையை சோதனை செய்து கண்காணிக்கலாம்.

* கொடுங்கையூரில் குப்பையிலிருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் ஒப்பம் கோரப்பட உள்ளது. இதில், உயர்தொழிற் நுட்பம் மற்றும் உயர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தேவையான தொழில் நுட்பத்தை அமல்படுத்தலாம்.

* குப்பையை தரம் பிரித்துப் பெறுவதற்கு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு சம்பந்தமாக பள்ளி மாணவர்கள் கற்கும் வகையில், ஒரு பாடமாக சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பெரிய குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுகளை திறமையான முறையில் சேகரிக்க ஒரு அமைப்பை நிறுவலாம்.

மேற்கண்ட இந்த ஒன்பது பரிந்துரைகளை முதல்வரிடம் அளித்திருக்கிறோம்' என்று மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com