
RRR படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
இந்தியாவின் உயரிய விருதுகளாக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் கருதப்படுகின்றன. ஆண்டுதோறும், ஏராளமான பிரபலங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த விருது விழாவில், 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இயக்குநர் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கான கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.
டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருதை கீரவாணிக்கு வழங்கினார். மேலும் நேற்றைய விழாவில் பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்ம விருது அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மறைந்துவிட்டதன் காரணத்தால், அவரது குடும்பத்தினர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.