

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் குடிமை விருதுகளை வழங்கி வருகிறது. கலை, கல்வி, மருத்துவம், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, பொதுச் சேவை மற்றும் சமூகப் பணி எனப் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா முதல் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய நான்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த 2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் 131 பேர் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கே.எம். மயிலானந்தன், கால்நடை விஞ்ஞானி டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், திருவாரூரைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் பக்தவச்சலம், நீலகிரியைச் சேர்ந்த குறும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணா, சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்தபதி கலியப்பர், எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் நடிகர் மாதவன் உள்ளிட்ட 13 பேர் பத்ம விருதுகள் வாயிலாகக் கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருது பெறுவோருக்குக் கிடைக்கும் சலுகைகள்:
இந்தியாவின் தலைசிறந்த சிவில் விருதுகளைப் பெற்றவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், பண மதிப்பை விட மரியாதையின் அடிப்படையிலேயே வரையறுக்கப்படுகின்றன.
1. பாரத ரத்னா (Bharat Ratna): 1954-இல் தொடங்கப்பட்ட இது, இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இதைப் பெறுபவர்களுக்கான பிரதான சலுகைகள்:
அரசு மரபுப்பட்டியல் (Table of Precedence): மத்திய அமைச்சர்களுக்கு நிகரான அந்தஸ்து.
வரிவிலக்கு: வருமான வரி விலக்கு மற்றும் விருது தொடர்பான பரிசுகளுக்கு வரி கிடையாது.
இலவசப் பயணம்: ஏர் இந்தியா விமானங்களில் வாழ்நாள் முழுவதும் 'Executive/First Class' பயணம் மற்றும் இந்திய ரயில்களிலும் முதல் வகுப்பு அல்லது AC கோச்சில் இலவசமாக பயணம் செய்யலாம்.
பாதுகாப்பு: தேவைப்பட்டால் 'Z-Grade' பாதுகாப்பு.
அரசு விருந்தினர் உரிமை: மாநிலப் பயணங்களின் போது VVIP மரியாதை மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் தூதரக வசதிகள்.இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அவர்களுக்கு அரசு விருந்தினர் மாளிகை வழங்கப்படும். அங்கு தங்குமிடம், உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றிற்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் சிறப்பு வசதிகளை பெறவும், விமான நிலையங்களில் தனி வரிசையில் செல்லவும் உதவும் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
தேசிய விழாக்கள்: குடியரசு மற்றும் சுதந்திர தின விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு.
குறிப்பு: இதற்கு நேரடிப் பணப் பரிசு கிடையாது.
2. பத்ம விருதுகள் (Padma Awards): பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்குச் சில பொதுவான விதிமுறைகள் உள்ளன:
சமூகம் மற்றும் தொழில்முறை சார்ந்த புகழுடன், முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.
இந்த விருதுகளுக்கு நேரடிப் பணப் பரிசோ, ரயில்/விமானப் பயணச் சலுகைகளோ அல்லது 'Table of Precedence'-இல் குறிப்பிட்ட இடமோ வழங்கப்படுவதில்லை.
இவை எந்த அரசியல் பதவியையும் பெறுவதற்கான தகுதியைத் தராது. மரியாதை மற்றும் சமூக அங்கீகாரமே இதன் சிறப்பு.
முக்கியக் குறிப்பு:
இந்த விருதுகளைப் பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ (Prefix or Suffix) பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது. இவை அரசாங்கம் வழங்கும் பட்டங்கள் அல்ல, கௌரவங்கள் மட்டுமே. இதை மீறிப் பயன்படுத்தினால் அரசு எச்சரிக்கை விடுக்கலாம் அல்லது மிக அரிதான சூழலில் விருதைத் திரும்பப் பெறவும் வாய்ப்புள்ளது.