
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பாகிஸ்தான் தொடர்பு தற்போது தெளிவாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் ஆதாரங்கள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர், ஹர்வான் பகுதியில் கொல்லப்பட்ட இந்த மூன்று ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள், லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் மூத்த உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் ஏப்ரல் 22 அன்று பஹல்காமின் பைசரன் மைதானத்தில் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, 26 பேர் உயிரிழந்த நிலையில், டாச்சிகாம்-ஹர்வான் காட்டுப் பகுதியில் மறைந்திருந்தனர்.
புலனாய்வாளர்கள் சேகரித்த ஆதாரங்கள் பலத்த ஆதரவாக உள்ளன.
பாகிஸ்தான் தேசிய தரவுத்தள மற்றும் பதிவு ஆணையம் (NADRA) இலிருந்து பெறப்பட்ட பயோமெட்ரிக் தரவு, வாக்காளர் அட்டைகள், செய்மதிப் பேசி தரவு மற்றும் GPS பதிவுகள் மூலம் அவர்களது பாகிஸ்தான் அடையாளம் உறுதியாகியுள்ளது.
கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட இரண்டு லேமினேட்டட் வாக்காளர் அட்டைகள், லாகூர் (NA-125) மற்றும் குஜ்ரான்வாலா (NA-79) வாக்காளர் பட்டியல்களுடன் பொருந்துகின்றன.
மேலும், சேதமடைந்த செய்மதிப் பேசியில் இருந்த மைக்ரோ-SD அட்டையில் உள்ள NADRA-வின் Smart-ID தரவு - விரல் ரேகைகள், முக ஸ்கேன்கள் மற்றும் குடும்ப பின்னணி - அவர்களது சாங்கா மங்கா (காசூர் மாவட்டம்) மற்றும் ராவலகோட்டுக்கு அருகிலுள்ள கோயன் கிராமம் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) ஆகிய முகவரிகளை உறுதிப்படுத்தின.
கூடுதலாக, கராச்சியில் தயாரிக்கப்பட்ட 'CandyLand' மற்றும் 'ChocoMax' சாக்லேட் உறைகள் மீட்கப்பட்டன.
அவற்றின் லாட் எண்கள் மே 2024இல் முசாஃபராபாத், PoK-க்கு அனுப்பப்பட்ட சரக்குடன் பொருந்துகின்றன.
பைசரன் தாக்குதல் தளத்தில் கிடைத்த 7.62x39 மிமீ கார்ட்ரிட்ஜ் கேசிங்குகள் மற்றும் ஜூலை 28 அன்று மீட்கப்பட்ட மூன்று AK-103 ரைபிள்களுக்கு இடையே நடத்தப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு பொருந்தியது.
பாகிஸ்தான் பக்கத்திலிருந்து அவர்களது ரேடியோ சோதனையை புலனாய்வு இடைமறிப்பு பதிவு செய்தது.
ஏப்ரல் 21 அன்று, மூவரும் பைசரனில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள ஒரு குடிசையில் தங்கியிருந்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட இரண்டு உள்ளூர் நபர்களான பர்வாஸ் மற்றும் பஷீர் அகமது ஜோதர், தாக்குதல்காரர்களுக்கு உணவு மற்றும் இரவு தங்குமிடம் வழங்கியதாகத் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பின், பயங்கரவாதிகள் டாச்சிகாம் காட்டை நோக்கி தப்பியோடினர்.அவர்கள் பயன்படுத்திய ஹுவாய் செய்மதி பேசி ஏப்ரல் 22 முதல் ஜூலை 25 வரை தொடர்ந்து செய்மதியுடன் தொடர்பில் இருந்துள்ளது.
அதன் சிக்னலின் முக்கோண அளவீடு, அவர்களது மறைவிடத்தை ஹர்வான் காட்டில் உள்ள நான்கு சதுர கிலோமீட்டர் பகுதியாக குறைத்து காட்டியது.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவின் தெற்கு காஷ்மீர் ஆபரேஷன் தலைவரான சஜித் சைஃபுல்லா ஜாட் (சாங்கா மங்கா, லாகூர்), இந்த தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.
அவரது குரல் மாதிரி செய்மதி பேசியிலிருந்து பெறப்பட்ட இடைமறித்த தகவல்களுடன் பொருந்தியது.
ஜூலை 28 மோதலுக்குப் பின், லஷ்கர்-இ-தொய்பாவின் ராவலகோட் தலைவர் ரிஸ்வான் அனீஸ், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பங்களைச் சந்தித்து, ஜூலை 29 அன்று அவர்களுக்காக கைபானா நமாஸ்-இ-ஜனாஸா தொழுகை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் அனைத்து ஆதாரங்களும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.