பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் மக்கள் வழிபாட்டில் இருந்த சமயம் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் சமீபத்தில் நிகழ்த்தப்பட்டது. இதில் நூறு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் மட்டுமின்றி, உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தைச் செய்தது, ‘தெஹ்ரிக் இ தலிபான்’ என்ற தீவிரவாத அமைப்பு என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தாமாகவே முன்வந்து இந்த தீவிரவாத அமைப்பினர் இதை ஒப்புக் கொண்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியோடு, ஆப்கானிஸ்தானின் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இதுபோன்று இன்னும் பல பயங்கரத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் தொடரும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து அந்தத் தீவிரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “பாகிஸ்தானில் ஒருகாலத்தில் தீவிரவாதம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டது. ஆனால், முந்தைய ஆட்சியாளர்களின் தீவிரவாத கவனக்குறைவால் தற்போது பயங்கரவாதிகள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டிய தருணம் இது” என்று அவர் பேசினார்.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இத்தோடு தனது பேச்சை நிறுத்திக்கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர், ‘கடவுளை வழிபடும்போது மக்களைக் கொல்வது எத்தனை மோசமான செயல்? இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கூட இதுபோன்ற அநியாயம் நடக்காது. ஆனால், அது பாகிஸ்தானில் நடைபெற்று இருக்கிறது’ என்று பேச்சோடு பேச்சாக இந்தியாவை வம்புக்கு இழுத்ததோடு, இந்தியா ஏதோ தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடு என்பது போலக் குறிப்பிட்டு திமிராகப் பேசி உள்ளார். கவாஜா ஆசிப்பின் இந்த திமிர் பேச்சு உலக நாடுகளுக்கிடையே பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் அவர் பேசும்போது, ‘ஒருகாலத்தில் தீவிரவாத விதைகளைத் தூவியது தாங்கள்தான்’ என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.