

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அண்டை நாடான இலங்கைக்கு உதவ முன்வந்த பாகிஸ்தானின் செயல், தற்போது சர்வதேச அளவில் பெரும் அவமானத்தையும் ஏளனத்தையும் சந்தித்துள்ளது.
இரக்கம் காட்டுவதாக நினைத்து இஸ்லாமாபாத் அனுப்பிய நிவாரணப் பொட்டலங்கள், காலாவதி தேதி முடிந்து ஒரு வருடத்துக்கும் மேலானவை எனத் தெரிய வந்துள்ளதால், சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
வெள்ள நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு அனுப்பப்படுவதைச் சிறப்பாகக் காட்டுவதற்காக, பாகிஸ்தான் தூதரகம் தன் அதிகாரபூர்வமான X (ட்விட்டர்) பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டது.
"பாகிஸ்தான் எப்போதும் இலங்கையுடன் நிற்கிறது" என்று அவர்கள் பதிவிட்ட உற்சாகமான செய்தி, புகைப்படங்களை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே தலைகீழாக மாறியது.
ஏனெனில், அந்தப் புகைப்படங்களில் இருந்த பொட்டலங்களின் லேபிள்களில் "EXP: 10/2024" என்று அச்சிடப்பட்டிருந்தது.
இந்தப் பேரிடர் டிசம்பர் 2025-ல் நடக்கும் நிலையில், அக்டோபர் 2024-இலேயே காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
பேரழிவில் சிக்கிய மக்களுக்கு மரியாதையே இல்லாமல், கெட்டுப்போன பொருட்களைக் கொடுத்து ஏமாற்றுவதா என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினர்.
இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம், தாங்கள் கொண்டாடிய அந்த ட்வீட்டை ரகசியமாக நீக்கியது.
தங்கள் தவறை உணராத பாகிஸ்தான், இந்த அவமானகரமான சறுக்கலுக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தியா செய்த பிரம்மாண்ட உதவி!
பாகிஸ்தான் இப்படி உலக அரங்கில் தலைகுனிவைச் சந்தித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், இந்தியா களத்தில் இறங்கி தன் அண்டை நாட்டுக் கடமையைச் செவ்வனே செய்தது.
சமீபத்திய 'தித்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவும் வகையில், இந்தியா 'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) என்ற பெயரில் மாபெரும் மனிதாபிமான உதவிப் பணியைத் தொடங்கியது.
நவம்பர் 28 முதல், இந்தியப் படைகள் கடல் மற்றும் வான் வழிகள் மூலம் 53 டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களைத் துரிதமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தன.
வெளியுறவு அமைச்சகத்தின்படி, 2,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த மீட்புப் பணியை மேற்பார்வையிட்டு, ஐ.என்.எஸ். சுகன்யா கப்பல் திருகோணமலைக்கு நிவாரணப் பொருட்களுடன் வந்து சேர்ந்த புகைப்படத்தை வெளியிட்டு, இந்திய அரசின் உறுதியை உறுதிப்படுத்தினார்.
பாகிஸ்தான் குடிமக்களையும் மீட்ட இந்தியா!
இந்திய விமானப் படையின் சி-130J மற்றும் ஐ.எல்.-76 விமானங்கள், அத்துடன் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலிலிருந்து சேடக் ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் உட்படப் பலர் மீட்கப்பட்டனர்.
இதில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியா மீட்டுக் காப்பாற்றியவர்களில் இலங்கை, ஜெர்மனி, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் குடிமக்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவர்.
ஒருபுறம், காலாவதியான பொருட்களை அனுப்பி உலக அரங்கில் அவமானத்தை வாங்கிய பாகிஸ்தான்.
மறுபுறம், ஒரு துளி சுயநலமும் இல்லாமல், தன் ராட்சதக் கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் மூலம், பாகிஸ்தானின் குடிமக்களையே பத்திரமாக மீட்டுத் தன் அண்டை நாட்டு நேசத்தை நிலைநாட்டியது இந்தியா.