பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பாகிஸ்தான் விமானம் சுமார் பத்து நிமிடங்கள் இந்திய வான்பரப்பில் இருந்துள்ளதுடன் விமானம் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன் இந்திய இராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.லாகூரில் தரையிறங்க வேண்டிய பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகள் விமானம் கனமழை காரணமாக தவறுதலாக இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த நிலையில், அதிகாரிகளின் அனுமதி பெற்று மாற்றுப்பாதையில் பத்திரமாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.
இந்திய வான்பகுதியில் பாகிஸ்தான் பயணிகள் விமானம் நுழைந்து 120 கி.மீ. தூரம் பயணித்து திரும்பி சென்றுள்ளது. மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் பயணிகள் விமானத்தின் விமானி அதன் பாதையை தவற விட்டதால் அது இந்தியாவில் நுழைந்து திரும்பி பாகிஸ்தான் எல்லைக்கு பயணித்தது.
லாகூர், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு 'போயிங் 777' ரக விமானம், கடந்த 4-ந் தேதி இரவு 8 மணியளவில், வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.
அந்த விமானம், லாகூர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டும். விமான நிலையத்தை நெருங்கிய போது, கனமழை பெய்து கொண்டிருந்தது. எனவே, தரை இறங்க முடியவில்லை. கனமழையாலும், குறைவான உயரத்தில் பறந்ததாலும் விமானி பாதையை தவற விட்டார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பதானா போலீஸ் நிலையம் வழியாக விமானம் இந்திய வான்பகுதிக்குள் நுழைந்து விட்டது. பின்னர் மீண்டும் பாகிஸ்தான் வான்பகுதிக்குள் விமானம் நுழைந்தது. பாகிஸ்தான் விமானம், மொத்தம் 10 நிமிடம் இந்திய வான்பகுதியில் இருந்துள்ளது. 120 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது.
மோசமான வானிலையால் விமானி பாதையைத் தவறவிட்ட நிலையில், விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்துள்ளதாக இந்திய விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி விளக்கமளித்த நிலையில் வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள இந்திய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.