சிறையில் வாடும் 199 இந்திய மீனவர்களை விடுவிக்கிறது பாகிஸ்தான்!

சிறையில் வாடும் 199 இந்திய மீனவர்களை விடுவிக்கிறது பாகிஸ்தான்!
Published on

டலில் அத்துமீறி  மீன் பிடிக்கும் குற்றத்துக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாட்டு கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கைது செய்து வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் கராச்சி சிறைகளில் 654 இந்திய மீனவர்கள் சிறைப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல், இந்திய சிறைச்சாலைகளில் 83 பாகிஸ்தானிய மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இந்திய மீனவர்கள் 654 பேரில் 631 மீனவர்களின் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் 199 பேரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ய இருக்கிறது.

இதுபற்றி பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண சிறைத் துறை அதிகாரி காசி நசீர் கூறுகையில், “இந்திய மீனவர்கள் 199 பேரை வரும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதற்கான ஆவணங்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டு இருக்கிறோம். இந்த 199 மீனவர்களும் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். விடுதலை செய்யப்படவிருக்கும் இந்திய மீனவர்களுடன் இந்திய சிவில் கைதி சுல்பிகரையும் விடுதலை செய்ய இருந்தோம். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கராச்சி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்து விட்டார்” என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து கராச்சி லந்தி சிறை அதிகாரிகள் கூறும்போது, “சுல்பிகர் கடுமையான காய்ச்சல் மற்றும் இதய பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல் நிலை கடந்த வாரம் மோசமடைந்தது. எனவே அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு நுரையீரல் தொற்று காரணமாக அவர் உயிரிழந்து விட்டார்” என்று கூறி இருக்கிறார்.

இதுபற்றி இந்தியக் கைதிகளுக்கு உதவி வரும் அறக்கட்டளை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கராச்சியில் உள்ள லந்தி மற்றும் மாலிர் சிறைகளில் நோய்வாய்ப்படும் சிறைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை. இதனால் நாள்பட்ட நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே, சுல்பிகரின் மரணத்தில் மர்மம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com