இந்தியர்களைக் குறி வைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்.

இந்தியர்களைக் குறி வைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்.
Published on

பாகிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடாக இருந்தாலும், பல காலமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இதனிடையே, இந்தியர்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் முக்கியத் தகவல்களைத் திருட முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

APT36 என்று அழைக்கப்படும் ஹேக்கர் குழுவானது, பாகிஸ்தானை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் இந்தியாவின் ராணுவ ரகசியங்கள், IIT, NIT போன்ற நிறுவனங்களின் சில முக்கியத் தகவல்களைத் திருட முயற்சிப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

இந்தியாவின் முக்கியத் தகவல்களை ஹேக் செய்வதற்கென்றே பிரத்தியேகமாக ஒரு வைரஸ் கோப்பை உருவாக்கி, அதை யாருக்கும் தெரியாமல் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கிளிக் செய்யும்படி அனுப்பி விடுகிறார்கள்.  இதை யாராவது தெரியாமல் கிளிக் செய்யும்போது, அவர்களின் கம்ப்யூட்டர் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களில் ஹேக்கர்கள் எளிதாக உள்ளே நுழைந்து, அதில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திருடி விடுவதாகக் கூறப்படுகிறது. 

மேலும், இந்த ஹேக்கர் குழு இந்தியாவின் சில மதிப்புமிக்க நிறுவனங்களின் மீதும் இந்த வைரஸ் தாக்குதலை நடத்த திட்டமிடுகிறார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கடந்த 2022 முதலே இந்தக் குழுவினர் இந்தியாவில் உள்ள ஐஐடி மையங்கள், சில கல்வி நிலையங்கள் மற்றும் என்ஐடி போன்றவற்றை தாக்கத் துவங்கியுள்ளனர். 

ஏன் இவர்கள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை குறிவைத்து ஹேக் செய்ய நினைக்கிறார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இந்த செயல்பாடு கடந்த 2022ல் தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு பிப்ரவரியில் அவர்களின் தாக்குதல் உச்சத்தைத் தொட்டிருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தத் தாக்குதல் மிகவும் நவீனமானது என்றும், இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி பலரை மோசடி செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அப்படி பாதிக்கப்பட்டவர்களிடம், உங்களுடைய தகவல்களை லீக் செய்து விடுவோம் என்றும் மிரட்டி வருகிறார்கள். எனவே இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தேவையில்லாத லிங்க்குகளை கிளிக் செய்து எதையும் டவுன்லோட் செய்ய வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற ஹேக்கிங் செயல்பாடுகளில் இருந்து தப்பிப்பதற்கு, முடிந்தவரை ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லெட் போன்ற சாதனங்களை அவ்வப்போது சாப்ட்வேர் அப்டேட் செய்து கொள்வது முக்கியமானது. முறையாக சாப்ட்வேர் அப்டேட் செய்தாலே சாதனங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com