இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய ஆசிய கோப்பை 2025 சூப்பர் ஃபோர் ஆட்டத்தில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி, துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எனினும், இந்த ஆட்டம் பல சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் வெற்றிக்கு சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் 105 ரன்கள் குவித்து, வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். பந்துவீச்சில், ஷிவம் துபே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், பும்ரா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் பலவீனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது, ஏனெனில் நான்கு கேட்சுகள் கைவிடப்பட்டன.
இதேவேளை, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது அணியின் வெற்றியை தியாகம் செய்த வீரர்களுக்கும், காஷ்மீரில் இறந்த அப்பாவி மக்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப், பவுண்டரி எல்லைக்கு அருகில் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் சைகையை செய்து, சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தோ-பாக் போரில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக வெளியான தகவலை கிண்டல் செய்யும் வகையில், அவர் “6-0” என்ற சைகையையும் காட்டினார். இந்த செயலுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதே போட்டியில், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்த பிறகு, துப்பாக்கியால் சுடுவது போல சைகை செய்து சர்ச்சையில் சிக்கினார். இந்த சம்பவம், களத்திற்கு வெளியே பாகிஸ்தானின் பிரச்சினைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த போட்டிக்கு முன்பு நடந்த டாஸ் நிகழ்வின்போது, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்க மறுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான பதட்டத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, இந்த போட்டி தொடங்குவதற்கு முன், அரசியல் காரணங்களால் போட்டி நடத்தலாமா வேண்டாமா என நீண்ட விவாதம் நடத்தினர். இறுதியில், போட்டி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.