

மத்திய அரசு வழங்கும் ஆதார் கார்டு என்பது குடிமக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல் தொழில்புரிவோர் மற்றும் பணிபுரிபவர்களுக்கு பான்கார்டு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு, பான்கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்கான கால அவகாசமும் கொடுத்திருந்தது. அதன்படி, கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாகவும் இருந்தது.
இருந்தும், அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடுவும் இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இன்னும் 3 நாட்களில் இந்த கால அவகாசம் முடிவடையும் நிலையில், போர்டலும் பிஸியாக இருந்து வருகிறது. இதனால் கூடுதல் காலக்கெடு நீட்டித்து வழங்கப்படுமா என கோரிக்கையும் எழுந்தது.
இதனையடுத்து, பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, வருகின்ற ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.