ஓ.பி.எஸ் தரப்பு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்திருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!

ஓ.பி.எஸ் தரப்பு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்திருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளை ஒட்டி, நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், பண்ருட்டி ராமச்சந்திரன். இடைத்தேர்தல் முடிவு பார்த்து ஓ.பி.எஸ் மனவேதனையை பகிர்ந்து கொண்டதாகவும், பத்திரிக்கையாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசுமாறு கேட்டுக்கொண்டதால் சந்திக்க வந்திருப்பதாக குறிப்பிட்டார்.

'பேரதிர்ச்சியையும் மன வேதனையையும் இடைத்தேர்தல் முடிவுகள் தந்திருக்கின்றன. எங்களுடைய கோட்டை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள். சரி அவர்களே முன்னின்று நடத்தட்டும் என்றுதான் முழு ஒத்துழைப்பு தந்தோம். அப்படியிருந்தும் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. இது போல் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இடைத்தேர்தல் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்?'

'அ.தி.மு.க என்னும் இயக்கம், புரட்சித் தலைவர் ரத்தத்தை வியர்வையாக்கி உருவாக்கிய இயக்கம். அடுத்து வந்த புரட்சித் தலைவி கஷ்டப்பட்டு இயக்கத்தை காப்பாற்றினார். அப்படியெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்காக இருந்த கட்சி, இன்று இத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்கிறது. எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோமே என்று மன வேதனையுடன் எண்ணத் தோன்றுகிறது'

'கழக தொண்டர்களுக்கு மன வேதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் யார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றுதான் ஓ.பி.எஸ் ஆரம்பகாலம் தொடங்கி ஒத்துழைப்பு தந்திருக்கிறார். ஆனால், எடப்பாடி தரப்போ, ஒத்துழைப்புக்கு உலை வைத்தார்கள். எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தின் அடிப்படை விதியை மாற்ற நினைத்தார்கள். ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை உதாசீனப்படுத்தினார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக உச்சநீதிமன்றத்தை அவர்கள் நாடியபோது, உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பை முழு மனதோடு ஏற்றுகொண்டோம். இரட்டை இலை சின்னம் கிடைத்தால் போதும் என்று நினைத்து விட்டுக்கொடுத்தோம். வேட்பாளரை திரும்பப் பெற்று, நாங்களும் உழைக்கிறோம் என்று சொன்ன பிறகும் யாரும் எங்களை அழைக்கவில்லை. ஈரோடு தொகுதியைச் சேர்ந்த எங்களுடைய தொண்டர்களை .கூட தேர்தல் பணியில் ஈடுபடுத்தவில்லை. எனினும் இரட்டை இலை சின்னத்திற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, எங்களால் இயன்ற ஒத்துழைப்பை தந்திருக்கிறோம்.

இரட்டை இலை சின்னத்திற்கு துணை நின்று, தாங்கள் கொடுத்த ஒத்துழைப்பால் டெபாசிட் கிடைத்தது என்பது எங்களுக்கு ஆறுதலான செய்தியாக இருக்கிறது. எடப்பாடியின் ஆணவப் போக்குதான் இந்த தோல்விக்கு காரணம். தேர்தல்களில் எடப்பாடி என்றைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டாரோ அன்று முதல் அ.தி.மு.கவுக்கு தோல்விதான் கிடைத்திருக்கிறது. இன்று கட்சியையும் இழந்துவிடுவோம் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது'

பண்ருட்டியில் பிறந்த ராமச்சந்திரன், அ.தி.மு.கவில் சின்ன ராமச்சந்திரன் என்று அழைக்கப்பட்டவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

எம்.ஜி,ஆர் அமைச்சரவையில் நான்கு முறை அமைச்சராக இருந்திருக்கிறார். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக என பல்வேறு கட்சிகளில் பயணித்துவிட்டு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர்.

ஜெயலலிதா இருந்தவரை பண்ருட்டி ராமச்சந்திரனால் அ.தி.மு.கவில் இணைய முடிந்ததில்லை. அரசியலில் பழுத்த அனுபவம் மிக்கவர். இலங்கைப் பிரச்னையில் எம்.ஜி.ஆருக்கும் ராஜீவ் காந்திக்கும் நடுவே நல்ல ஆலோசகராக இருந்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்தபோது, பண்ருட்டி ராமசந்திரன் ஓ.பி.எஸ் தரப்பிற்கு உதவிக்கரம் நீட்டினார். ஓ.பி.எஸ், சசிகலா என இரு தரப்பினரிடம் தொடர்ந்து பேசி வந்தார். தற்போது ஓ. பன்னீர்செல்வத்தின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com