பெற்றோர் சித்ரவதை. வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி!

பெற்றோர் சித்ரவதை. வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி!
Published on

ரு குழந்தைக்கு அன்பும் அரவணைப்பும்  தரவேண்டிய பெற்றோரே கடுமையாக நடந்து கொண்டால் அந்தக் குழந்தை என்ன செய்யும்? இதோ இந்த சிறுமியைப்போல் வீட்டை விட்டு வெளியேறத்தான் செய்வார்கள்.

ஓமலூர் அருகே  நாலுகால் பாலம் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தனது தாய் தந்தை அடிப்பதாகவும் சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும் அதனால் சேலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக பொது மக்களிடம் ரூபாய் 20 கேட்டுள்ளார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்ததில் அந்தச் சிறுமி முள்ளு செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியான விமல் - அஞ்சலை ஆகியோரின் மகள் துர்கா தேவி என்பதாகவும் தனக்கு இரண்டு வயதில் தங்கை இருப்பதாகவும் தந்தை விமல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதால் தாயார் அஞ்சலை கூலி வேலைக்கு சென்று விடுவதால், தன்னை பள்ளிக்கு அனுப்பாமல், தங்கையை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருக்கும்படி கட்டாயப் படுத்துவதாக கூறி அழுதார்.

மேலும் தந்தை விமல் தினமும் குடித்துவிட்டு வந்து தனது கால்களை கட்டிப் போட்டு அடித்து உடலில் சூடு வைத்து சித்திரவதை செய்வதால் வீட்டை விட்டு வெளியேறிய தாகவும்  கூறியுள்ளார்.  தொடர்ந்து அவ்வழியே வந்த ஒரு வேனில் ஏறி அமர்ந்து கொண்டு சேலத்தில் உள்ள தனது பாட்டில் விடும்படி சிறுமி கெஞ்சியுள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த தாயாருடன் செல்ல சிறுமி மறுத்தார். அப்போது வீட்டுக்கு வந்தால் என்னை அடித்து கொன்று விடுவீர்கள் நான் பாட்டியின் வீட்டுக்கே சென்று அங்கேயே படித்துக் கொள்கிறேன் என்று கதறி அழுதார். எங்கள் வீட்டுக்கு மட்டும் என்னை அனுப்பி விடாதீர்கள் என பொதுமக்களையும்  பார்த்து கையெடுத்து கும்பிட்டு அந்த சிறுமி கதறி அழுதார்.

தனது தாயாரின் கால்களை பிடித்துக் கொண்டு தன்னை விட்டு விடும்படி சிறுமி கதறி அழுததைப் பார்த்த சிலர் ஓமலூர் காவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பின் சிறுமியை எப்படியோ சமாதானம் செய்து அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் ஓமலூர் சப் இன்ஸ்பெக்டர் அங்கமுத்துவும் முள்ளு செட்டிபட்டிக்கு சென்று சிறுமியை அழைத்து சமரசம் செய்து அவரது பெற்றோருக்கு அறிவுரையும் கூறினார். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஏதோவொரு காரணத்தைச் சொல்லி விபரீதம் தெரியாமல் வீட்டை விட்டு வரும் இவர் போன்ற சிறுமிகள் செய்தது தவறு எனினும் குடித்துவிட்டு வந்து அடிக்கும் தந்தையின் செயலைக் கண்டித்து  துணிவாக வீட்டை விட்டு வெளியே வந்ததுடன் மக்களிடம் தன் நிலையை எடுத்துச்சொல்லி அது போலீசின் கவனத்துக்கு சென்று பெற்றோருக்கு அறிவுரையும் வழங்க வைத்திருப்பது ஒரு விதத்தில் பாராட்டுகுரியதோ என்று தோன்றுகிறது. 

இந்த குடியால் இப்படி எத்தனை சிறுவர், சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனரோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com