
பிரான்ஸ் தலைநகரான பாரீஸ், செய்ன் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. செய்ன் ஆறு பிரான்சின் இரண்டாவது நீளமான ஆறாகும், இது பாரீஸ் நகரத்தின் வழியாக பாய்ந்து செல்கிறது. மிகவும் பழமையான இந்த ஆறு சுமார் 700 கி.மீட்டர் தூரம் பாய்ந்தோடி அந்த நாட்டை செல்வ செழிப்பாக மாற்றி இறுதியில் ஆங்கில கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. செய்ன் ஆறு பாரீஸ் நகரின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும் இது பல பாலங்கள் மற்றும் ஈபிள் கோபுரத்துடன் இணைந்து நகரத்தின் அழகை அதிகரிக்கிறது. செய்ன் ஆறு பாரீஸ் நகரத்தின் அடையாளமாகவும், வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்துள்ளது.
செய்ன் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் 'காதலின் நகரம்' என்றும் 'விளக்குகளின் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆற்றில் பொதுமக்கள் குளிக்க கடந்த 1923 -ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு ஆகியவற்றை அதிகாரிகள் காரணம் காட்டினர். இதனால் நீர் மாசுபாட்டில் இருந்து அந்த ஆறு பாதுகாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு (2024) பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து செய்ன் ஆறு முழுவதுமாக தூர்வாரப்பட்டு பல்வேறு விதமான போட்டிகளும் அந்த ஆற்றில் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு செய்ன் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வீதம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. செய்ன் ஆற்றில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
செய்ன் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்காக மூன்று நியமிக்கப்பட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒன்று ஈபிள் கோபுரத்திற்கு அருகில், மற்றொன்று நோட்ரே டேம் கதீட்ரலுக்கு அருகில் மற்றும் கிழக்கு பாரீஸில் மூன்றில் ஒரு பகுதி. இந்த பகுதிவரை பொதுமக்கள் நீச்சல் அடிக்கலாம் என்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை எல்லை கயிறு கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஆற்றில் கரையோரத்தில் உடை மாற்றும் அறைகள், குளியலறைகள் மற்றும் கடற்கரை பாணி தளபாடங்கள் போன்ற வசதிகள் உள்ளன. குறைந்தபட்சம் 10 அல்லது 14 வயதுடைய எவருக்கும், திட்டமிடப்பட்ட நேரங்களில் இலவசமாக குளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இருப்பவர்களைக் கண்காணிக்க உயிர்காப்பாளர்களும் இருப்பார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளால் தண்ணீரின் தரம் தினமும் சோதிக்கப்படுகிறது. நீரின் ஆழமற்ற தன்மை காரணமாக டைவிங் அனுமதிக்கவில்லை.
இதனால் சந்தோஷமடைந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த ஆற்றில் உற்சாகமாக குளிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்.