கோயம்புத்தூரைச் சேர்ந்த 33 வயது பெண்மணி ஒருவர் இணையத்தில் பார்ட் டைம் வேலை தேடியபோது பிரபல சமூக வலைதள செயலியான டெலிகிராமில் விளம்பரம் ஒன்றைக் கண்டுள்ளார். அதில் ஹோட்டல்களுக்கு ரிவ்யூ எழுதி பணம் சம்பாதிக்கும் விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விபரங்கள் மற்றும் சலுகைகள் இவரை ஈர்த்ததால் உடனடியாக அந்த வேலையில் சேர்ந்து விடலாம் என முடிவு செய்துள்ளார்.
தொடக்கத்தில் அவர் பதிவிடும் ஒவ்வொரு ரிவியூவிற்கும் தகுந்த சம்பளம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். சரியாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வேலையில் அவர் சேர்ந்துள்ளார். தொடக்கத்தில் அந்நிறுவனம் கூறியது போலவே சம்பளமும் கொடுத்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் மீது நம்பிக்கை ஏற்பட்டதால் தொடர்ந்து அந்த வேலையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் தான் அப்பெண்ணிடம் அந்நிறுவனத்தில் இருந்து பேசிய மர்ம நபர் ஒருவர் பணத்தை முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பது பற்றி பேசியுள்ளார். பணத்தை முதலீடு செய்தால் அதில் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், போடும் பணம் விரைவில் இரட்டிப்பாகும் எனக்கூறி ஆசையைத் தூண்டியுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண்ணும் மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் அனுப்பிய பணம் 15 லட்சங்களுக்கு மேல் சென்றும் அதற்கான பலன் கிடைக்காததால், அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அந்த அழைப்பு சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.
அதன் பிறகுதான் தான் ஒரு மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனடியாக கோவை சரக்க சைபர் கிரைம் போலீசை தொடர்பு கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தன்னிடம் ஒரு மோசடி கும்பல் 15 லட்சம் வரை ஏமாற்றியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். என்னதான் காவல்துறையினர் இணையத்தில் பல மோசடி கும்பல்கள் இருப்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்றளவும் பல அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.