டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்றபோது, அவரை தூய்மைப் பணியாளர் ஹர்ஷ் என்பவர் அவரை தன் வீட்டில் உணவருந்த அழைத்தார்.
அதன்பிறகு டெல்லி திரும்பிய கெஜ்ரிவால், அந்த தூய்மைப் பணியாளரை குடும்பத்துடன் தன்னுடைய டெல்லி வீட்டுக்கு அழைத்து மதிய விருந்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் நேற்று முன் தினம் (செப்டம்பர் 25) அகமதாபாத்தில் தூய்மை பணியாளர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துரையாடினார்.
அப்போது, ஹர்ஷ் சோலான்கி என்ற தூய்மைப் பணியாளர், டெல்லி முதல்வரை தனது வீட்டிற்கு உணவருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். நாங்கள் தாழ்த்தப்பட்ட வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களின் வீட்டிற்கு சாப்பிட வருவீர்களா என்று அழைப்பு விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த அரவிந்த் கேஜ்ரிவால், ‘’நீங்கள் என் வீட்டுக்கு சாப்பிட வர ஒப்பு கொண்டால், நானும் உங்கள் வீட்டில் உணவருந்த வருகிறேன்’’ என்று சொல்ல, கெஹ்ரிவாலின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் ஹர்ஷ்.
இதையடுத்து கெஜ்ரிவால் அளித்த் விமானப் பயணம் மூலம் நேற்று (செப்டம்பர் 26) ஹர்ஷ் குடும்பத்தினர் காலை 10 மணிக்கு டெல்லி சென்றனர்.
அவர்களை ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.ராகவ் சந்தா சென்று வரவேற்றார். பின்னர் ஹர்ஷ் குடும்பத்தினர் நேற்று மதியம் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் உணவருந்தி, பின்னர் மாலை 6.30 மணிக்கு குஜராத் திரும்பினர்.