‘கட்சியே பிரதானம்; அதற்காக தியாகம் செய்ய வேண்டி உள்ளது’ ஜி.பரமேஸ்வரா சமரசம்!

‘கட்சியே பிரதானம்; அதற்காக தியாகம் செய்ய வேண்டி உள்ளது’ ஜி.பரமேஸ்வரா சமரசம்!

ர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி சுமார் ஐந்து நாட்கள் இழுபறிக்குப் பிறகு அந்த மாநிலத்தின் முதலமைச்சரை அறிவித்திருக்கிறது. அதன்படி சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை சிவக்குமாரே மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதையடுத்து, சித்தராமையாவும் சிவக்குமாரும் நேற்று இரவு பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநில அமைச்சரவை குறித்து விவாதிக்க இருவரும் இன்று தலைநகர் டெல்லிக்குச் செல்ல உள்ளனர்.

இந்தச் சூழலில், ‘தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும். இல்லையென்றால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முதலமைச்சர் போட்டியில் இருந்த தலித் எம்எல்ஏவுமான ஜி.பரமேஸ்வரா. ஆனால், கட்சி தலைமை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களை அறிவித்ததைத் தொடர்ந்து, செய்தி நிறுவனம் ஒன்று, பரமேஸ்வராவின் கோரிக்கையை முன்வைத்து அவரிடம் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதில் அளித்த ஜி.பரமேஸ்வரா, “அனைத்து விஷயங்களும் சுமூகமாக நிறைவடைந்து, சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. அவர்கள் இருவரும் அனைவரையும் நிச்சயம் அரவணைத்துச் செல்வார்கள். அதன் மூலம் எங்களின் வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும். துணை முதல்வர் பதவி என்பது என்னுடைய தனிப்பட்ட கோரிக்கை இல்லை. ஆனாலும், கட்சியுடன் ஒப்பிடும்போது எனது கோரிக்கை முக்கியமானதும் இல்லை. கட்சியே பிரதானமானது. அதற்காக தியாகம் செய்ய வேண்டி உள்ளது. இதுபோன்ற கோரிக்கைகள் எப்போதும் இருக்கும். அவை அனைத்தையும் நிறைவேற்றிட முடியாது. நீண்ட பயணத்தில் அனைத்து விஷயங்களும் சரி செய்யப்பட்டு, அனைவரும் கவனிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும். அதேபோல், 2024 மக்களவைத் தேர்தலையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறி உள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் போட்டியில் இருந்த ஜி.பரமேஸ்வரா, ஏற்கெனவே காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியில், குமாரசாமி முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக எட்டு ஆண்டுகள் பொறுப்பில் இருந்து உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com