குலாம் நபி ஆசாத்துக்கு "ஷாக்" கொடுத்த கட்சியினர்!!

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்
Published on

1970-களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அக்கட்சியிலும், காங்கிரஸ் அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதலை தீர்ப்பவராகவும், கூட்டணியை இறுதி செய்யும் முக்கிய தலைவராகவும் இருந்தவர். கட்சித் தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்தார்.

“ராகுல்காந்தியை பக்குவம் இல்லாதவர், பொறுப்பற்றவர். அவரது குழந்தைத் தனமான நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி பல்வேறு தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை ராகுல்காந்தியின் பாதுகாவலர்களும், பி.ஏ.க்களும்தான் எடுக்கின்றனர். மூத்த தலைவர்கள் ஒதுக்கிவைக்கப் படுகின்றனர் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலடியாக ராகுல்காந்தியும், சோனியாவும் நேரடியாக எந்த விமர்சனங்களையும் வைக்கவில்லை.

காங்கிரசிலிருந்து விலகிய பின்னர் குலாம் நபி ஆசாத், பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் “முற்போக்கு ஜனநாயக ஆசாத் கட்சி” என்கிற புதிய அரசியல் கட்சியை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கினார்.

ஆசாத்தின் கட்சி பா.ஜ.க.வின் ‘பி’ டீம் என விமர்சனத்துக்குள்ளானது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் தகவல்கள் உலாவின.

இந்நிலையில், “இமாச்சல் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சவாலாக காங்கிரஸ்தான் இருக்க முடியும். காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வேண்டும். நான் காங்கிரசின் கொள்கைகளை எதிர்க்கவில்லை. அதன் பலவீனமான செயல்பாடுகளைத்தான் எதிர்க்கிறேன்” என்று கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் ஒரு கூட்டத்தில் ஆசாத் பேசியிருந்தார்.

இப்படி வெளிப்படையாக அவர் பேசியதை வைத்து அவரை மீண்டும் காங்கிரஸுக்கு இழுக்கும் நோக்கில், காஷ்மீரில் ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அதன் அமைப்பாளர் திக்விஜய் சிங் ஆசாத்திற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அம்பிகா சோனி, யாத்திரையில் பங்கேற்றால் அந்த சந்திப்பு மீண்டும் காங்கிரஸில் சேர வழிவகுக்கும் என்று ஆசாத்திற்கு யோசனை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இதை ஆசாத் மறுத்துவந்தார். "நானோ எனது கட்சியினரோ மீண்டும் காங்கிரஸில் சேரும் பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், குலாம் நபி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கியப் பிரமுகர்கள் 17 பேர் காங்கிரஸுக்கு திரும்பி ஆசாத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். காஷ்மீரில் ராகுல் யாத்திரை தொடங்கும் நிலையில் இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாராசந்தா, முன்னாள் அமைச்சர் பீர்சதா முகமது சையத், முஸாஃபர் பாரே, பல்வான் சிங், மொகிந்தர் பரத்வாஜ், பூஷண் டோக்ரா, விநோத் சர்மா, நரீந்தர் ஷர்மா, நரேஷ் சர்மா, அம்பரீஷ் மஹோத்ரா, சுபாஷ் பாகத், பத்ரிநாத் சர்மா, வருண் மஹோத்ரா, அனுராதா சர்மா, விஜய் டர்கோத்ரா, சந்தர் பிரபா சர்மா உள்ளிட்டோர் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். இவர்களில் தாராசந்த், பல்வான் சிங் இருவரும் ஆசாத்தின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவிக்கையில் "இந்த நாள் காங்கிரஸுக்கு மகிழ்ச்சியான நாள். ராகுலின் ஒற்றுமை யாத்திரை பெரிய இயக்கமாக மாறியுள்ளது. காங்கிரஸ் கொள்கைகளில் நம்பிக்கையுள்ளவர்களும் நாட்டின் ஒற்றுமையில் ஆர்வம் உள்ளவர்களும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே தாம் மீண்டும் காங்கிரஸில் சேர உள்ளதாக வெளியான தகவலை ஆஸாத் மறுத்துள்ளார். “இந்த தகவல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. முற்றிலும் அடிப்படை இல்லாதது. நான் காங்கிரஸில் சேரும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி மீதும், தலைமை மீதும் எனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம்” என்று ஆஸாத் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com