பாட்னா பொதுக்கூட்டம் - ஆளுக்கொரு காரணம் கூறி நழுவும் எதிர்க்கட்சிகள்!

பாட்னா பொதுக்கூட்டம் - ஆளுக்கொரு காரணம் கூறி நழுவும் எதிர்க்கட்சிகள்!
Published on

பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் இணைக்கும் முயற்சியாக பாட்னாவில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் யாரெல்லாம் மேடையேற இருக்கிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

பாட்னாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்றிரவே பாட்னா சென்று சேர்ந்திருக்கிறார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வதும் உறுதியாகியிருக்கிறது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆம் ஆத்மி கட்சி நிபந்தனை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிபந்தனை விதித்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாட்னா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறார்.

கேஜ்ரிவாலை ஆதரிக்கப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி நேற்று தடாலடியாக அறிவித்திருக்கிறது. பாட்னா பொதுக்கூட்டத்தில் யாரும் அரவிந்த் கேஜ்ரிவாலை தேடப்போவதில்லை என்று கிண்டலடித்திருப்பதால் ஆம் ஆத்மி கட்சி சார்பாக யாரும் பங்கேற்க வாய்ப்பில்லை. ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தனது குடும்ப நிகழ்வு காரணமாக கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்பறு தெரிகிறது.

நாளைய கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார். பாட்னா கூட்டத்தில் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. கரங்கள் கோர்த்தாலும், இதயங்கள் இணையப் போவதில்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வன்முறை போன்றவற்றால் நாடு கஷ்டப்படும்போது அம்பேத்காரின் அரசியல் சாசனத்தின்படி சமத்துவ சமுதாயம் அமையப்போவதில்லை என்று அவர் பாணியில் டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் மற்றும் தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அழைப்பு விடுத்தாலும் பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதும் தெரிந்த விஷயம்தான். யாரெல்லாம் மேடையேறுவார்கள் என்பதே உறுதியாக இல்லாத நிலையில், என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் யூகிக்கவே முடியாது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com